புதுடெல்லி: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி இன்று ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், அங்கு இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல, பாகிஸ்தானில் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு பிஎஸ்எல் அணிகளான பெஷாவர் ஸல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையே போட்டி நடைபெறவிருந்தது. இந்நிலையில், இந்த மைதானம் ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்த முயன்றதை அடுத்து இந்த பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்துள்ளது.
முன்னதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இன்று காலை, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் குறிவைத்தன. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி பகுதிகளில் சிறிய பீரங்கிகள் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. அதே தீவிரத்துடன் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
நேற்றிரவு (மே 07) அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், பூர்தலாஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பட்டிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தரலாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்க பாகிஸ்தான் முயன்றது.
இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் அவை முறியடிக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களின் சிதைவுகள் இப்போது பாகிஸ்தானிய தாக்குதல்களை நிரூபிக்கும் பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.