புதுடெல்லி: சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பக்கத்தில் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறியுள்ளதாவது: “ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை இந்தியாவில் முடக்குமாறு அரசு தரப்பில் இப்போது எந்தவித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காண எக்ஸ் தளத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என அவர் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் போது சில எக்ஸ் தள கணக்குகளை முடக்குமாறு அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு சட்ட ரீதியாக கோரி உள்ளது. அதன்படி அப்போது சில எக்ஸ் தள கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கலாம். அதில் ராய்ட்டர்ஸ் நிறுவனமும் ஒன்றாக இருந்திருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில், தற்போது அந்த கோரிக்கைக்கு எக்ஸ் தளம் நடவடிக்கை எடுத்தது இதற்கு காரணமாக இருக்கலாம் என தகவல்.
தற்போது இந்தியாவில் ராணுவ நடவடிக்கை சார்ந்த சூழல் இல்லை. இந்நிலையில், ராய்ட்டர்ஸ் நிறுவன எக்ஸ் தள கணக்கு முடக்கத்தை நீக்குமாறும், அதற்கான விளக்கத்தையும் மத்திய அரசு, எக்ஸ் நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தகவல்.
அதே நேரத்தில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் மற்ற பிரிவுகளின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் தடையின்றி பயனர்களால் அக்சஸ் செய்ய முடிவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களின் எக்ஸ் தள கணக்குகள், யூடியூப் சேனல்கள் இந்தியாவில் அரசின் கோரிக்கையை ஏற்று முடக்கப்பட்டுள்ளன. அண்மையில் அந்த தடை தொடர்வதாக அரசு தரப்பு தெரிவித்திருந்தது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் சில மணி நேரம் அந்த கணக்குகளை இந்திய பயனர்கள் அக்சஸ் செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.