புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை பிரசாதம் எனக் கூறி 6 லட்சம் பேரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை செய்த பிறகு சுவாமி பிரசாதம் கிடைக்கவில்லை என அயோத்தி காவல் நிலையங்களுக்கு புகார்கள் வரத் தொடங்கின. அந்த புகார்கள் மாநில சைபர் கிரைம் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. சைபர் கிரைம் பிரிவு நடத்திய விசாரணையில், போலி இணையதளம் உருவாக்கி, ராமர் கோயில் பிரசாதம் அனுப்புவதாக விளம்பரப்படுத்தப்பட்டது தெரியவந்தது.
காஜியாபாத்தை சேர்ந்த ஆசிஷ் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். ராமர் கோயில் பிரசாதம் பெற இந்தியாவில் ரூ.51 எனவும், வெளிநாட்டவர்களுக்கு 11 டாலர் எனவும் கட்டணம் நிர்ணயித்துள்ளார். அந்தவகையில், 3 கோடியே 85 லட்சம் ரூபாயை, 6 லட்சத்து 30,695 பக்தர்களிடம் ஏமாற்றி வசூல் செய்துள்ளார்.
இதையடுத்து சைபர் கிரைம் தடுப்பு போலீஸார் அதிரடியாக செயல்பட்டு ஆசிஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். தற்போது அவரிடம் இருந்து 2 கோடியே 15 லட்சத்து 8,426 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 கோடியே 70 லட்சத்து 47,313 ரூபாயையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு உ.பி. சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் முகமது அர்ஷத் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. சைபர் கிரைம் குற்றங்களில் முதல் முறையாக ஏமாற்றப்பட்ட தொகையை மீட்டுள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.தற்போது அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில், சன்னதிகளுக்கும் பிராண பிரதிஷ்டை நடைபெற்றுள்ளது. அதனால் போலி இணையதளங்கள் பெருகும் அபாயம் உள்ளதாக போலீஸார் எச்சரித்துள்ளனர். மேலும், பிரசாதம் பெற நினைக்கும் பக்தர்கள், இணையதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அறிவுறுத்தி உள்ளனர்.