ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் ரக போர் விமானம் ஒன்று விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது. இதனை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த விபத்தில் பைலட் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
காவல் துறை தகவல்: “விபத்துக்குள்ளான விமானம் சூரத்கர் விமானப் படை தளத்திலிருந்து புறப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் பனோடா கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 1.25 மணிக்கு விழுந்து நொறுங்கியது. விபத்துப் பகுதியில் மனித உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதாக தகவல்கள் வருகின்றன. அங்கே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது முடிந்தபின்னரே உறுதியாகத் தெரியவரும். ராஜல்டேசர், ரத்னாகர் காவல் நிலையங்களில் இருந்து காவலர்கள் மற்றும் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன” என்று ரத்னாகர் காவல் உயர் அதிகாரி தெரிவித்தார்.
முந்தைய விபத்துகள் – ஒரு பார்வை: முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் இந்திய விமானப் படையின் இருவர் அமரக்கூடிய ஜாகுவார் ரக போர் விமானம், ஜாம்நகரில் இருந்து இரவு நேர பயிற்சிக்காக புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. அதில் சித்தார்த் யாதவ் என்ற பைலட் உயிரிழந்தார். இன்னொருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
மார்ச் 2025-ல், ஹரியானாவின் பஞ்சகுலா மாவட்டத்தில் இந்திய விமானப் படை விமானம் ஒன்று வழக்கமான பயிற்சியின்போது விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோதும், விமானி சாதுர்யமாக மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இருந்து விமானத்தை துரிதமாக வேறு பக்கம் திருப்பிவிட்டு பாதுகாப்பாக வெளியேறினார் என்று விமானப் படை தெரிவித்தது.
பிப்ரவரி 2025-ல் இரண்டு வீரர்கள் அமரக்கூடிய மிராஜ் 2000 ரக போர் விமானம், மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி அருகே விபத்துக்குள்ளானது. பயிற்சியின்போது இந்த விபத்து நிகழ்ந்தது. ஆனால் இரண்டு பைலட்டுகளும் பத்திரமாக வெளியேறினர். 2024 நவம்பரில், மிக் 29 ரக போர் விமானம் ஆக்ராவில் ஒரு விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது. விமானி தப்பித்தார்.