ஜலவாட்: ராஜஸ்தானின் ஜலவாட் மாவட்டம், பிப்லோட் என்ற கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நேற்று காலை 8.30 மணியளவில் வகுப்பறைகளுக்கு வந்த மாணவர்கள், இறைவணக்க நிகழ்ச்சிக்கு தயாராக இருந்தனர். அப்போது பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் சுமார் 40 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். பதறிப்போன ஆசிரியர்களும் கிராம மக்களும் மீட்புப் பணியில் இறங்கினர். பின்னர் அதிகாரிகளும், பேரிடர் மீட்புக் குழுவினரும் அங்கு விரைந்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் மனோகர்தானா, ஜலவாட் நகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இந்த கடினமான தருணத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினர் குறித்து கவலைப்படுகிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.