ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.
ஜலாவர் மாவட்டம், தங்கிபுரா காவல் எல்லைக்கு உட்பட்ட பிப்லோட் கிராமத்தில் இயங்கி வரும் இடைநிலை அரசு பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று வழக்கம்போல் பள்ளி கூடி, காலையில் இறைவணக்கம் பாடிக்கொண்டிருக்கும்போது பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
இதில், இடிபாடுகளில் மாணவர்கள் பலர் சிக்கி உள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து மேற்கொண்ட மீட்புப் பணி மூலம் பல மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த விபத்தில் 6 மாணவர்கள் உயிரியழந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தங்கிபுரா காவல்நிலைய அதிகாரி விஜேந்திர சிங், “4 மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர். 32 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் மிக மோசமாக காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் ஜலாவரில் உள்ள எஸ்ஆர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 7.45 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகளின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மோசமாக காயமடைந்த இரண்டு மாணவர்களும் உயிரிழந்த நிலையில், பலி 6 ஆக அதிகரித்துள்ளார்.
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர், “பிப்லோட் கிராமத்தில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுவிட்டது. காயமடைந்த மாணவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான முழுமையான உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
முதல்வர் பஜன்லால் ஷர்மா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பள்ளி மேற்கூரை இடிந்து விழந்த சம்பவம் மிகவும் வலியை தரக்கூடிய சோகமான சம்பவம். காயமடைந்த சிறுவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் அவர்களின் குடும்பத்தினர் இந்த இழப்பை தாங்குவதற்கான வலிமையை பெறுவதற்கும் கடவுளை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆழந்த வேதனையைத் தெரிவித்துள்ளனர்.