பெங்களூரு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2029-ஆம் ஆண்டு பிரதமராவார் என்றும், நாடு ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “2029-ஆம் ஆண்டு ராகுல் காந்தி இந்த நாட்டின் அடுத்த பிரதமராக வருவார் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவை. இந்த நாட்டை சுற்றிலும் நமக்கு எந்த நண்பர்களும் இல்லை” என்றார்.
கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சிவகுமார், “உலகில் உள்ள அனைவரும் நம்பிக்கையில் வாழ்கிறார்கள். நம்பிக்கை இல்லாமல், வாழ்க்கை இல்லை. முதல்வர் பதவி முக்கியமல்ல. நான் சுயநலமாக இருக்க விரும்பவில்லை. கடின உழைப்பு நிச்சயமாக பலனளிக்கும். நாங்கள் கட்சி உயர்மட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி செல்கிறோம். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், அதன்படி செயல்படுகிறோம். கர்நாடகாவுக்கு நல்லாட்சியை வழங்குவதே குறிக்கோள்.
நான் காங்கிரஸில் பிறந்தேன், காங்கிரஸ்காரனாகவே இறப்பேன். பாஜகவுக்கு எந்த சித்தாந்தமும் இல்லை. காந்தி குடும்பத்துக்கு தான் எனது விசுவாசம் எப்போதும் உண்டு. காந்தி குடும்பம்தான் கட்சியையும், நாட்டையும் ஒற்றுமையாக வைத்திருக்கிறது” என்று அவர் கூறினார்.