லக்னோ: பிஹாரில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் அவமதிக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உ.பி.யில் அவர் செல்லவிருந்த சாலையில் அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் உ.பி.யின் ரேபரேலி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று தனது தொகுதிக்கு பயணம் மேற்கொண்டார். முன்னதாக அவர் ரேபரேலி செல்லவிருந்த சாலையில் உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது ‘‘ராகுல் திரும்பிப் போ’’ என அவர்கள் முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் கூறுகையில், “பாஜக தொண்டர்களுக்கு பயந்து ராகுல் மாற்றுப் பாதையில் ரேபரேலி சென்றுவிட்டார். ராகுலுக்கும் ஒரு தாயார் இருக்கிறார். ஒருவரின் தாயை திட்டும் உரிமையை அவர் யாருக்கும் தரக்கூடாது.
ஒரு தாயை அவமதித்தவர்களை அவர் கண்டித்திருக்க வேண்டும்.மாறாக ராகுல் அவர்களை மேலும் ஊக்குவிப்பதாக தெரிகிறது’’ என்றார். ராகுல் அண்மையில் பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தினார்.
தர்பங்காவில் இந்த யாத்திரை நடந்தபோது, உள்ளூர் காங்கிரஸ் தலைவர் அமைத்திருத்த சிறிய மேடையில் 25 வயது இளைஞர் ஒருவர் பிரதமர் மோடியின் தாயாரை அவமதிக்கும் வகையில் பேசினார். இது தொடர்பாக அந்த நபர் பிறகு கைது செய்யப்பட்டார்.