பாட்னா: பிஹாரில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் இணைந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்க திட்டமிட்டிருந்த ‘வோட் அதிகார் யாத்திரை’ ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நடைபயணம் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. இந்த நடைபயணத்துக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் எனவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் மரணம் இந்த ஒத்திவைப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
முந்தைய திட்டத்தின்படி, ‘வோட் அதிகார் யாத்தி’-ரையின் முதல் கட்டப் பயணம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஆகஸ்ட் 19 ஆம் தேதி அராரியா மாவட்டத்தில் உள்ள நர்பட்கஞ்சில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி இணைந்து ஏற்பாடு செய்த இந்த யாத்திரை, தேர்தல் ஆணையத்தின் சர்ச்சைக்குரிய சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறைக்கு எதிரான நேரடி போராட்டமாகவும் திட்டமிடப்பட்டது. இந்த யாத்திரையின் போது மத்திய அரசு மற்றும் பிஹாரின் நிதிஷ் குமார் அரசாங்கத்தையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் இணைந்து திட்டமிட்டிருந்த இந்த நடைபயணத்தை இரு கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.