புதுடெல்லி: கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து மிகப் பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். இது குறித்த தரவுகளை வெளியிட்ட அவர், ஐந்து விதமாக ‘வாக்குகள் திருட்டு’ நடந்துள்ளதாக விவரித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி அணுகுண்டு வீசிவிட்டார் என்று பரபரப்புகள் கூடிய நிலையில், அவரது குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். கூடவே, ‘இது ராகுலின் உச்சபட்ச விரக்தியின் வெளிப்பாடு மட்டுமே’ என்று அவரை பாஜக கிண்டல் செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே திட்டமிடப்படுகின்றன. இதற்கு, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதிக்கு கிடைத்த முடிவுகளே சாட்சி.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 16 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணிக்கை கிடைத்தது. ஆனால், நாங்கள் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். வெற்றி வாய்ப்புள்ள 7 தொகுதிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம். இந்த தோல்வி குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம்.
இந்த விரிவான ஆய்வில், பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து ஐந்து விதமாக வாக்குகள் திருடப்பட்டது தெரியவந்தது. 1. போலி வாக்காளர்கள், 2.போலி முகவரி, 3.ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், 4.தவறான புகைப்படங்கள், 5.படிவம் 6 தவறாக பயன்படுத்தப்படுவது என 5 விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில், 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் நடந்திருந்தால், நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள்.
மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 11,965 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போலி மற்றும் தவறான முகவரிகள் மூலம் 40,009 வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் 40,009 வாக்காளர்களுக்கு போலியான வீட்டு முகவரி இடம்பெற்றுள்ளது. இதில் சிலருடைய வீட்டு முகவரயின் கதவு எண் ‘பூஜ்ஜியம்’ என்று இருக்கிறது.
வாக்குகளை யார் திருடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்பு, எங்களிடம் ஆதாரம் இல்லை, ஆனால் இப்போது எங்களிடம் நூறு சதவீதம் ஆதாரம் உள்ளது. அனைத்துத் தரவுகளும் கிடைத்துள்ளன. இந்த வாக்குத் திருட்டு பல தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இப்போது சாக்குப்போக்கு சொல்லக் கூடாது. அவர்கள் எங்களுக்கு சிசிடிவி காட்சிகள் மற்றும் மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும். இது எனது கோரிக்கை மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் ஆகும்” என்று வெகுண்டெழுந்திருக்கிறார் ராகுல் காந்தி.
பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி தரவுகள் – ஆதாரங்கள் என ஆய்வு முடிவுகளைச் சுட்டிக்காட்டி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தேர்தல் ஆணையம் எதிர்வினை: கர்நாடகாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், கர்நாடக மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி இது குறித்து ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ‘கர்நாடகாவில் தகுதியற்ற வாக்காளர்கள் பலர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பல தகுதியுடைய வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் நீங்கள் கூறியுள்ளீர்கள். அவ்வாறு நீக்கப்பட்ட மற்றும் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை 1960 தேர்தல் விதி 20 (உட்பிரிவு 3)-இன் கீழ், உங்களின் கையொப்பத்துடன் அனுப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அப்படி அனுப்பினால் மட்டுமே தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
இதேபோல், மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராகுலுக்கு எழுதிய கடிதத்தில், “வாக்காளர் பட்டியல் பத்தி 3-ன்படி, தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நீங்கள் கூறியதை புரிந்துகொள்ள முடிகிறது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 20(3)(b)-ன் கீழ் இந்தக் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள சத்தியப் பிராமணத்தில் கையொப்பமிட்டு திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சபட்ச விரக்தி: இதற்கிடையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை உச்சபட்ச விரக்தி என்று சாடியுள்ளது பாஜக. டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா, “ராகுல் காந்தியும், காங்கிரஸும் அவர்கள் வெற்றி பெற்ற இடங்களில் எந்த பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்துவதில்லை. இதுபோன்ற குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பொங்கும் போக்கை தேசம் கவனித்து வருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் 99 இடங்களில் காங்கிரஸ் வென்றது. அதைக் கொண்டாடவும் செய்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்கிறது. ராகுல் சொல்வது போல் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவில் சமரசம் செய்திருந்தால், 99 இடங்களில் வெற்றி கிடைத்தது எப்படி? ராகுல் காந்தி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில்தான் காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் ஃப்ரீடம் பார்க்கில் இன்று ‘வாக்கு அதிகாரப் பேரணி’ நடைபெறுகிறது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். ‘நமது வாக்கு, நமது உரிமை, நமது போராட்டம்’ என்ற கோரிக்கையுடன் இப்பேரணி நடைபெறுகிறது. பேரணியாக சென்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கவுள்ளனர்.