புதுடெல்லி: எல்லையில் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் ‘பாரத ஒற்றுமை’ நடைபயணத்தை தொடங்கினார். கடந்த 2023 ஜனவரி 30-ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் அவரது நடைபயணம் நிறைவு பெற்றது. இந்த பயணத்தின் போது, கடந்த 2022 டிசம்பர் 16-ம் தேதி செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அவர் கூறும்போது, “எல்லையில் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை, சீன ராணுவம் கொலை செய்தது. சமீபத்தில் அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவை அனைத்தையும் நாட்டு மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் சார்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ‘கடந்த 2022 டிசம்பர் 12-ம் தேதி அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, சீன வீரர்கள் பின்வாங்கி சென்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டது.
ராகுல் காந்தியின் விமர்சனம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) முன்னாள் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா, லக்னோவில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘இந்தியாவின் எல்லைப் பகுதிகளை ராணுவ வீரர்கள் இரவு, பகலாக பாதுகாத்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசி வருகிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ராகுலுக்கு பலமுறை சம்மன்: வழக்கை விசாரித்த லக்னோ நீதிமன்றம், ராகுல் காந்தி நேரில் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. சமீபத்தில்தான் நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் ஜாமீன் பெற்றார். இதற்கிடையே, லக்னோ நீதிமன்ற வழக்கை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், லக்னோ நீதிமன்ற வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டது. இதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மே 29-ம் தேதி அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கடந்த ஜூன் 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசி அமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அவர் கூறும்போது, “நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்புவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை. அந்த வகையில் எல்லைப் பிரச்சினை குறித்து ராகுல் காந்தி பேசினார். ஆனால், உள்நோக்கத்துடன் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. லக்னோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரினார்.
எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா சார்பில் மூத்த வழக்கறிஞர் கவுரவ் பாட்டியா ஆஜரானார். அவர் கூறும்போது, “நாட்டை பாதுகாக்க இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசி வருகிறார்’’ என்று குற்றம்சாட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசி கூறியதாவது: எல்லையில் 2,000 சதுர கி.மீ. பரப்பளவை சீன ராணுவம் ஆக்கிரமித்து இருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அவர் எல்லையில் முகாமிட்டு இருந்தாரா? அவரது குற்றச்சாட்டுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள். எல்லையில் மோதல் ஏற்படும்போது இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுவது இயல்பானது. இதை எதிர்மறையாக விமர்சிப்பது தவறான அணுகுமுறை.
பொறுப்பின்றி பேசக்கூடாது: நீங்கள் (ராகுல் காந்தி) மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறீர்கள். இதுபோன்ற விவகாரங்களை நீங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பலாம். சமூக வலைதளங்களில் பதிவிடுவது ஏன்? நாட்டு மக்கள் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. அதற்காக பொறுப்பற்ற வகையில் யாரும் பேசக் கூடாது. இப்போதைக்கு லக்னோ நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த விவகாரம் குறித்து உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா, மத்திய, மாநில அரசுகள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். 3 வாரங்களுக்கு பிறகு மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.