புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது பொருளாதார தடைகளால் பாதிக்கப்படுமானால், மாற்று வழிகள் மூலம் இந்தியா அதனை எதிர்கொள்ளும் என்று பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ராணுவ நடவடிக்கை 2022-ல் தொடங்குவதற்கு முன் நாம் நமது மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 0.2% மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து வந்தோம். தற்போது அது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை பன்முகப்படுத்தி உள்ளது. முன்பு நாம் 27 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் பெற்று வந்தோம். அந்த எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது.
நாம் ஒரு குறிப்பிட்ட நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலை ஏற்படுமானால், அடுத்த நாட்டிடம் இருந்து பெறுவோம். அதுவும் பாதிக்கப்படுமானால், வேறொரு நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவேம். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நான் கவலை கொள்ளவில்லை. எது நடந்தாலும் அதனை நம்மால் எதிர்கொள்ள முடியும். பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரை, நமது மக்களின் நலன்தான் அனைத்துக்கும் மேலானது” என தெரிவித்தார்.
முன்னதாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தும் ஓர் உத்தியாக, 50 நாட்களுக்குள் போர் நிறுத்தத்துக்கு முன்வராவிட்டால் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அதிகரிப்பதோடு, அந்த நாட்டிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கான பொருளாதார தடைகளும் அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். நேட்டோ கூட்டமைப்பும் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறும்போது, “பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. 50 நாட்களுக்குள் ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், அந்நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும். மேலும், 50 நாட்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், அடுத்ததாக ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் 100 சதவீத வரி விதிப்பை சந்திக்க நேரிடலாம்.
எனவே, இந்நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் புதினிடம், உக்ரைனுடன் போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும். இல்லை என்றால் ரஷ்யா சந்திக்கும் பாதிப்பை, அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளும் மிகப் பெரிய அளவில் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்தார். இந்தியா மீதான அமெரிக்காவின் நெருக்கடி அதிகரித்தால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்படும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 0.2% மட்டுமே கடந்த 2022-ல் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அது தற்போது 35% அளவுக்கு அதிகரித்துள்ளது. ரஷ்யாவுக்கு அடுத்ததாக ஈராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.