புதுடெல்லி: வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆண்டு இந்தியா வர உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அஜித் தோவல், ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி பதிவாகி உள்ளது. அதில் அவர், “ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு மிகச் சிறப்பான உறவு இருக்கிறது. இது ஒரு நீண்ட கால உறவு. இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட தொடர்புகள் உள்ளன. இந்தத் தொடர்புகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளன.
ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு இந்த ஆண்டு வர இருப்பதை அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளோம். தேதிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன என அறிகிறேன். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உச்சி மாநாட்டுக் கூட்டங்கள் எப்போதும் திருப்புமுனையாக இருந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால உறவு குறித்து இரு தலைவர்களும் பகிர்ந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை குறித்த தகவல் வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.