புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது தேசிய நலன் சார்ந்த முடிவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மீதான வரி விதிப்பு கொள்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜூலை மாத இறுதியில் அறிவித்தார். ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என அவர் பகரிங்கமாக அறிவித்தார். அது தொடர்ந்த நிலையில் 25 சதவீத பரஸ்பர வரி மற்றும் கூடுதலாக 25 சதவீதம் என இந்தியாவுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதித்துள்ளது அமெரிக்கா. தற்போது இது நடைமுறையில் உள்ளது.
இது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். “நமது தேவைக்கு எது சரி என்பதை பார்த்து பல்வேறு பொருட்களை வாங்கி வருகிறோம். இதன் அடிப்படையில்தான் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல பொருட்களை வாங்குகிறோம். இதில் விலை உள்ளிட்ட விவரங்களும் கவனிக்கப்படும்.
கச்சா எண்ணெய் அந்நியச் செலவாணி சார்ந்துள்ள ஒரு பொருள். அதனால் அதில் நமக்கு பொருத்தமானதை வாங்குகிறோம். அந்த வகையில் பார்த்தால் ரஷ்யாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும். அதில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்தியாவின் இறக்குமதி செலவில் கச்சா எண்ணெயின் பங்கு மிக அதிகம்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.