புதுடெல்லி: ரயில் பாதைகளை கடக்க முயன்ற போது அடிபட்டு 186 யானைகள் உயிரிழந்துள்ளன என்று மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வனப்பகுதிகள் வழியாகவும், வனப்பகுதிகளையொட்டி உள்ள பகுதிகளிலும் ரயில்வே தண்டவாளங்கள் செல்கின்றன. வனப்பகுதியிலிருந்து வெளியே வரும் யானைகள் இந்த ரயில் பாதைகளை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறக்கின்றன. இதைத் தடுப்பது தொடர்பான ஆய்வை மத்திய வனத்துறை அமைச்சகம் முன்னெடுத்தது.
இதுதொடர்பான ஆய்வுகள் முடிந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நமது நாட்டில் 2009-10-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ரயில்பாதைகளை கடக்க முயன்ற 186 யானைகள் அடிபட்டு இறந்துள்ளன.
இதையடுத்து யானை வழித்தடங்களைக் கண்டறிந்து அந்தப் பகுதிகளில் பாலம், அல்லது யானைகள் அடிபடாதவாறு செல்வதற்கான வனத்தைப் போன்ற அமைப்பு போன்றவற்றை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 14 மாநிலங்களில் செல்லும் 127 ரயில்பாதைகளில் சுமார் 3,452 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், ரயில்வே அமைச்சகங்களும், மாநில வனத்துறை அமைச்சகங்களும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. இதன்மூலம் யானைகள் ரயில்பாதைகளை கடக்கும் இடங்களில் உயர்மட்ட ரயில்பாதைகள் அமைத்தல், நீர்வடிகால் அமைத்தல் போன்ற பணிகளைச் செய்ய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிகளை முன்னெடுத்துச் செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.