புதுடெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு நிகரான அடிப்படை ஊதியத்தை போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், 10 லட்சத்து 91 ஆயிரத்து 146 ஊழியர்களுக்கு ரூ.1,865.68 கோடி தொகை போனஸாக வழங்கப்பட உள்ளது.
தீபாவளி, தசரா, துர்கா பூஜை பண்டிகை காலத்தையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்படி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு நிகரான ஊதியம் இந்த ஆண்டு போனஸாக வழங்கப்படுகிறது. இதன்மூலம், 10,91, 146 ஊழியர்களுக்கு ரூ.1,865.68 கோடி தொகையானது உற்பத்தியுடன் தொடர்புடைய போனஸாக வழங்கப்படவுள்ளது.
தகுதியுள்ள ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ.17,951 போனஸாகப் பெறுவார்கள். இந்தத் தொகை ரயில்வே ஊழியர்களான தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் பிற குரூப்-சி ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
2024-25-ம் ஆண்டில் ரயில்வேயின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த நிதி ஆண்டில் ரயில்வே, 1,614.90 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டது. மேலும், 730 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.