புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் உள்ளது கடி குர்த் கிராமம். இதில் சரியான சாலை இன்றி அந்த கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த குர்த் கிராமவாசிகள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒரு வருடமாக முறையிட்டும் பலனில்லாமல் இருந்தது. இதனையடுத்து அந்த கிராமத்தில் வசிக்கும் கர்பிணிப் பெண்ணான லீலா சாஹு என்பவர் அந்த சாலையை தன் கைப்பேசியில் வீடியோ பதிவு செய்தார்.
மேலும் அந்த வீடியோவில் தானே தோன்றி, அங்கு சாலை வசதி இல்லாததால் ஏற்பட்டு வரும் பாதிப்பை விளக்கினார். தன்னுடன் சேர்த்து ஏழு கிராமப் பெண்கள் கர்ப்பமாக இருப்பதாகவும், அவர்களுக்கு ஒரு அவசரம் எனில் ஆம்புலன்ஸ் வராமல் எந்த ஆபத்தும் நிகழலாம் என எச்சரித்திருந்தார்.
மேலும், ‘விகாஸ் கஹான் ஹை(வளர்ச்சி எங்கு உள்ளது?)’ எனவும் கேள்வி எழுப்பியிருந்தார் லீலா. இந்த வீடியோவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பலரையும் டேக் செய்திருந்தார். சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.
லீலாவின் கோரிக்கை ம.பி. அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த பிரச்சனையை சித்தி தொகுதி பாஜக எம்.பியான ராஜேஷ் மிஸ்ராவும் கவனத்தில் எடுத்து லீலாவிற்கான பதிலை பொது அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அதில் அவர், உடனடியாக சாலை அமைப்பதற்கானப் பணி துவங்கி உள்ளது என்றும் மகப்பேறுக்கு ஒரு வாரம் முன்பாக தகவல் அளித்தால் அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து குர்த் கிராமத்தில் உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. இந்த காட்சியையும் பதிவாக்கிய கர்ப்பிணிப் பெண்ணான லீலா, நன்றி தெரிவித்துள்ளார். லீலாவின் முயற்சிக்கு அவரை குர்த் கிராமவாசிகள் பாராட்டி வருகின்றனர். இந்த சாலைக்காக பலவிதமானப் போராட்டங்கள் நடத்தியும் கிடைக்காத பலன் லீலாவின் முயற்சிக்கு கிடைத்துள்ளது.