புதுடெல்லி: மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா, ஆபரேஷன் சிந்தூரின் போது ஊடகங்களுக்கு விளக்கமளித்த கர்னல் சோபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க மாநில டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க மத்தியப் பிரதேச காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேச கேடரில் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்டு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த குழு உறுப்பினர்களில் யாரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்றும், அவர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு விசாரணைக் குழு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரியின் தலைமையில் இருக்க வேண்டும் என்றும், மற்ற இரண்டு உறுப்பினர்கள் எஸ்.பி அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்றும், இந்த சிறப்பு விசாரணைக் குழு மே 20 ஆம் தேதி காலை 10 மணிக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு விசாரணைக் குழு தனது கண்டுபிடிப்புகளை, நிலை அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அடுத்த விசாரணையை மே 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
விஜய் ஷா என்ன பேசினார்?: மத்தியப் பிரதேசத்தின் பழங்குடிகள் நலம் மற்றும் போபால் எரிவாயு துயர நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறையின் அமைச்சரான விஜய் ஷா, பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுடன் ராணுவ கர்னல் குரேஷியை தொடர்புபடுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
முன்னதாக, மே 12-ம் தேதி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் விஜய் ஷா, “அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளின் சிந்தூரை அழித்தனர். அவர்களை அழிக்க நாம் அவர்களின் சகோதரியை அனுப்பி பழிவாங்கினோம். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது இந்து சகோதரர்களைக் கொன்றனர். பிரதமர் மோடி, அவர்களின் (பயங்கரவாதிகளின்) சகோதரியை ராணுவ விமானத்தில் அனுப்பி அவர்களின் வீடுகளைத் தாக்கி பதிலடி கொடுத்தார். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளை விதவைகளாக்கினர். பிரதமர் மோடி, அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த சகோதரியை அவர்களுக்கு பாடம் கற்பிக்க அனுப்பினார்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
தனது பேச்சில் ராணுவ கர்னல் குரேஷியின் பெயரை அமைச்சர் குறிப்பிடவில்லை என்றாலும், சர்ச்சை வெடித்த பின்பு கொடுத்த விளக்கங்களில் சோபியா குரேஷியின் பெயரைக் குறிப்பிட்டு, தனது அறிக்கை சிதைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
நாடு முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் அமைச்சர் விஜய் ஷாவின் கருத்துகளுக்காக அவரைச் சாடியுள்ளனர். மேலும், விஜய் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.