புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம் கொட்டா மக்களவை தொகுதி பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 2014 முதல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி வகிக்கிறார். இதற்கு முன்பு பாஜக வுக்கு வாக்களிக்காத பல்வேறு பிரிவினர் குறிப்பாக ஏழை மக்கள் இப்போது எங்கள் கட்சிக்கு வாக்களிக்கின்றனர். பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. மோடி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதே இதற்கு காரணம்.
அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மோடிதான் தலைவர். 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை பிரதமர் மோடி தலைமையில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. மோடியை முன்னிறுத்தாவிட்டால் மக்களவைத் தேர்தலில் பாஜகவால் 150 இடங்களில்கூட வெற்றி பெற முடியாது.
மோடியின் பெயர் மட்டுமே கட்சிக்கு வாக்குகளைப் பெற உதவும். இது அவருடைய தலைமைத்துவத்துக்கும் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் சான்றாகும். அவரது உடல் அனுமதிக்கும் வரை, 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற நமது இலக்கை அடைய அவரது தலைமை தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.