பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அலாஸ்காவில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் தாம் நடத்திய சந்திப்பு குறித்து தனது கருத்துகளை பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்து கொண்டார்.
உக்ரைன் போர் குறித்து ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி கூறும்போது, மோதல்களுக்கு தூதரக ரீதியில் பேச்சுவாரத்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது என்றும், இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா – ரஷ்யா இடையே உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்றும், பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் இந்த தொலைப்பேசி உரையாடலின்போது இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிதிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். அப்போது ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதிபர் டொனால்டு ட்ரம்பை வாஷிங்டனில் இன்று சந்தித்துப் பேசுகிறார்.
ஜெலன்ஸ்கியை சந்திக்கும் சில மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில், “உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரும்பினால் ரஷ்யாவுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும். இல்லை போரை தொடர்ந்து நடத்த அவர் விரும்பினால், அவர் போராடலாம். இந்தப் போர் எப்படி தொடங்கியது என்பதை நினைத்துப் பாருங்கள்.
நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கக் கூடாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. அதேபோல் 12 ஆண்டுகளுக்கு முன்னர் கிரிமியா ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டது. அதை மாற்றமுடியும் என்று உக்ரைன் நினைக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “கிரிமியாவை ரஷ்யாவுக்கு தாரை வார்த்தது போன்ற மாஸ்கோவுக்கான சலுகைகள் புதினை வலுப்படுத்தியுள்ளது. கிரிமியா இழப்பின் விளைவாக, அதன் பின்னர் இன்னும் சில கிழக்குப் பிராந்தியங்கள், அப்புறம் டான்பாஸை இழந்தோம். இவை புதுப்புதுத் தாக்குதல்களை எங்களை நோக்கி ஏவ புதினுக்கு புதிய உத்வேகம் தருகிறது.
உக்ரைனுக்கு வாய் வார்த்தைகளாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் பலிக்கவில்லை. நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம். கூடவே, அது நீடித்த அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். கிரிமியாவை ரஷ்யாவுக்கு தாரை வார்த்திருக்கக் கூடாது. நாங்கள் இப்போது கீவ், ஒடேஸா, கார்கிவ் பகுதிகளும் அவ்வாறு ரஷ்யாவிடம் சென்றுவிடக் கூடாது என்றே போராடுகிறோம். நாங்கள் எங்களது சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம்” என்றார்.