கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அப்போது முதல் நாட்டின் பாதுகாப்புக்கு அவர் முதலிடம் அளித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் முப்படைகளையும் சர்வதேச தரத்துக்கு அவர் நவீனப்படுத்தி உள்ளார்.அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகளை வாங்கினார். தற்போது பாகிஸ்தானுடனான சண்டையில் இந்த ஏவுகணைகள் முக்கிய பங்காற்றின.
இதேபோல இந்திய விமானப் படைக்காக பிரான்ஸிடம் இருந்து அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கினார். இந்த போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகின்றன. பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் உட்பட ஏராளமான போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டு உள்ளன. 60-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியின் ஊக்கத்தால் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு புதிய போர்க்கருவிகளை கண்டுபிடித்திருக்கிறது. இதன்காரணமாக வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் வாங்குவது குறைந்து உள்நாட்டு ஆயுத உற்பத்தி கணிசமாக அதிகரித்து உள்ளது.
எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி துணிச்சலாக துல்லிய தாக்குதல்களை நடத்தி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு உரி தாக்குதல், கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்கள் ஏவுகணைகள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன. இதன்பிறகு இரு நாடுகளிடையே கடும் சண்டைநடைபெற்றது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவின் உதவியைகோரியது. தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் சமரசத்தால் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் ராஜ்ஜியத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் ராஜமூளை ராஜாக்களால் இந்தியாவிடம் பாகிஸ்தான் பணிந்திருக்கிறது என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜ்நாத் சிங் (பாதுகாப்பு துறை): பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செயல்படுகிறார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முப்படைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர் திறம்பட செயல்பட்டு வருகிறார். துணிச்சலுக்கு பெயர் பெற்ற ராஜ்நாத் சிங், கடந்த 2019 முதல் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கிறார். முப்படைகளை நவீனப்படுத்தியதில் அவரது பங்களிப்பு முக்கியமானது.
அமித் ஷா (உள்துறை): அரசியல் சாணக்கியர் என்றழைக்கப்படும் அமித் ஷா, தீவிரவாத அமைப்புகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். காஷ்மீர் மற்றும் வட மாநிலங்களில் தீவிரவாதத்தை ஒடுக்கியதில் அவரது பங்கு முக்கியமானது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மத்திய படைகளும் ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற அவர் உத்தரவிட்டார்.
ஜெய்சங்கர்(வெளியுறவுத் துறை): மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா, சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இந்திய தூதராகவும் வெளியுறவு செயலாளராகவும் பதவி வகித்தார். சர்வதேச அளவில் சீனாவின் பல்வேறு வியூகங்களை அவர் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறார். தற்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு நேரடி தொடர்பு இருப்பதை அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளிடம் அமைச்சர் ஜெய்சங்கர் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். இதன்காரணமாக சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
அஜித் தோவல் ( தேசிய பாதுகாப்பு ஆலோசகர்): பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் அவர், காந்தகார் விமான கடத்தலின்போது பயணிகளை பத்திரமாக மீட்டதில் முக்கிய பங்கு வகித்தார். ரா உளவாளியான அவர்பாகிஸ்தானில் பல ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து அந்த நாட்டின் ரகசியங்களை ராணுவத்துக்கு அளித்து வந்தார். தற்போதும் அஜித் தோவலின் வியூகங்களை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது.
முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்: பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையின்பேரில் முப்படைகளையும் ஒருங்கிணைக்க முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. தற்போது முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் பதவி வகிக்கிறார். கூர்க்கா படைப்பிரிவில் பணியை தொடங்கிய அவர் இந்திய ராணுவத்தின் பல்வேறு பிராந்தியங்களில் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு பாகிஸ்தானின் பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல், கடந்த 2019-ம் ஆண்டில் இந்திய, மியான்மர் ராணுவங்கள் இணைந்து நடத்திய தாக்குதல் ஆகியவை அனில் சவுகான் தலைமையில் நடைபெற்றன. தற்போது ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முப்படைகளையும் அனில் சவுகான் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
ராணுவ தளபதி உபேந்திர திவேதி: கடந்த ஆண்டு ஜூனில் இந்திய ராணுவத்தின் தளபதியாக உபேந்திர திவேதி பதவியேற்றார். இதற்கு முன்பு ராணுவத்தின் வடக்கு பிராந்திய தளபதியாகவும் ராணுவத்தின் துணை தளபதியாகவும் அவர் திறம்பட பணியாற்றினார். வடக்கு பிராந்திய தளபதியாக இருந்ததால் காஷ்மீர் நிலவரம் முழுவதையும் உபேந்திர திவேதி நன்கறிவார். இதன்காரணமாக தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் அவரே நேரடியாக களமிறங்கி பணியாற்றினார்.
கடற்படை தளபதி திரிபாதி: கடந்த ஆண்டு ஏப்ரலில் கடற்படை தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி பதவியேற்றார். இவரும், ராணுவ தளபதி உபேந்திர திவேதியும் மத்திய பிரதேசத்தின் ரேவாவில் உள்ள சைனிக் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் ஆவர். பள்ளிக் காலம் முதலே இருவரும் நெருங்கிய நண்பர்கள். இதன்காரணமாக தற்போது ராணுவம், கடற்படை இடையே மிக நெருங்கிய ஒத்துழைப்பு நிலவுகிறது.
விமானப்படை தளபதி ஏ.பி.சிங்: கடந்த செப்டம்பரில் விமானப்படை தளபதியாக அமர் பிரித் சிங் பதவியேற்றார். போர் விமானங்களை இயக்குவதில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற இவர், விமானப்படையின் பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஒரே நாளில் இந்திய எல்லை பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன.
அவை அனைத்தையும் விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் ஏவிய அனைத்து ஏவுகணைகளும் நடுவானில் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தற்போதைய சண்டையில் விமானப் படை முக்கிய பங்கு வகித்தது. இந்த பெருமை முழுவதும் தளபதி அமர் பிரித் சிங்கையே சேரும்.
வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி: கடந்த ஜூலையில் இந்திய வெளியுறவு செயலாளராக விக்ரம் மிஸ்ரி பதவியேற்றார். காஷ்மீரின் ஜம்மு பகுதியை பூர்விகமாகக் கொண்ட இவர், சீனா, ஸ்பெயின், மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் சூழலை நன்கு அறிந்தவர்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல், பாகிஸ்தான் ராணுவ தாக்குதல், இந்தியாவின் பதிலடி குறித்த தகவல்களை நாள்தோறும் ஊடகங்களுக்கு விக்ரம் மிஸ்ரி வழங்கினார். பாகிஸ்தான் மக்கள் தங்களது ராணுவம் மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை நம்பவில்லை. இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வழங்கிய தகவல்களை மட்டுமே நம்பினர்.
விங் கமாண்டர் வயோமிகா சிங்: கர்னல் சோபியா குரேஷியுடன் இணைந்து இந்திய விமானப் படையின் வயோமிகா சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வந்தார். இவர் மிகச் சிறந்த ஹெலிகாப்டர் விமானி ஆவார். வயோமிகா என்றால் பறப்பது என்று அர்த்தம். அவரது பெயருக்கு ஏற்றவாறு விமானப்படையில் சேட்டக், சீட்டா உள்ளிட்ட ஹெலிகாப்டர்களை இயக்கி வருகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது கடினமான மலைப்பகுதியில் ஹெலிகாப்டர்களை தரையிறக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இமயமலையின் 21,631 அடி உயரம் கொண்ட மணிரங் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் மீதான இந்திய விமானப்படையின் தாக்குதல் குறித்து வயோமிகா சிங் தெள்ளத்தெளிவான ஆங்கிலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்து பிரபலம் அடைந்துள்ளார்.
கர்னல் சோபியா குரேஷி: இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றும் சோபியா குரேஷி, குஜராத்தின் வதோதாரா பகுதியை சேர்ந்தவர். ஐ.நா. அமைதிப் படையில் சிறப்பாக பணியாற்றியதற்காக உச்ச நீதிமன்றமே இவரை பாராட்டியது. கடந்த 2018-ம் ஆண்டில் இவர் காஷ்மீரின் நக்ரோடாவில் பணியில் அமர்த்தப்பட்டார். அப்போது தனி ஆளாக ராணுவ வாகனத்தில் எல்லைப் பகுதிகளில் ரோந்து பணிக்கு சென்றார்.
அவரது துணிச்சலை பார்த்து உயரதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்தனர். கடந்த 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் குறித்து கர்னல் சோபியா குரேஷி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். கடந்த சில நாட்களாக அவரே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வந்தார். இந்திய ராணுவத்தின் வீரமுகமாக உலகம் முழுவதும் அவர் பிரபலமாகி உள்ளார்.