புதுடெல்லி: “பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்கா அனுப்பும் பரிசுகளால் இந்திய மக்கள் வேதனையடைந்துள்ளனர்” என்று எச்1பி விசா விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு ட்ரம்பின் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு, பெறப்படும் பரிசுகளால் இந்தியர்கள் பெரும்பாலும் வேதனையடைந்துள்ளனர். உங்கள் ‘ஆப்கி பார், ட்ரம்ப் சர்க்கார்’ அரசிடம் இருந்து வரும் பிறந்தநாள் பரிசுகள் இதுதான்… எச்1பி விசாக்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை மிகவும் பாதிக்கக் கூடியது. ஏனெனில் எச்1பி விசா வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள்.
ஏற்கெனவே அமெரிக்காவால் விதிக்கப்பட்ட 50% வரியால், 10 துறைகளில் மட்டும் இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அவுட்சோர்சிங்கை பாதிக்கும் ‘ஹையர்’ சட்டம், சபாஹர் துறைமுக விலக்கு நீக்கப்பட்டது ஆகியவை பெரும் இழப்பை ஏற்படுத்தும். மேலும், இந்தியப் பொருட்களுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல், மீண்டும் சமீபத்தில் தனது தலையீடு மூலமாகவே இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறுகிறார்.
இந்திய தேசிய நலன்கள் மிகவும் உயர்ந்தவை. அரவணைப்புகள், வெற்று முழக்கங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மக்களை ‘மோடி, மோடி’ என்று கோஷமிட வைப்பது வெளியுறவுக் கொள்கை அல்ல. வெளியுறவுக் கொள்கை என்பது நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பது, இந்தியாவை முதன்மையாக வைத்திருப்பது மற்றும் அறிவு, சமநிலையுடன் நட்பை வழிநடத்துவது ஆகும். மேலோட்டமான துணிச்சலுக்கு அப்பால் இந்தியாவின் தேசிய நலனை முதன்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம்” என்று கார்கே குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, “நான் மீண்டும் சொல்கிறேன்… இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, “அமெரிக்கா திட்டமிட்டு இந்தியாவை தாக்கி வருகிறது. இது இந்தியா – அமெரிக்க உறவுகளுக்கு நல்லதல்ல” என்று கூறியுள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் மூத்த காங்கிரஸ் தலைவரான பவன் கேரா, “இது ஒரு புதிய நிகழ்வு அல்ல. ஜூலை 5, 2017 அன்று, ராகுல் காந்தி ட்வீட் செய்து, இது போன்று ஒரு சம்பவம் நடக்கப் போகிறது. ஏதாவது செய்யுங்கள் என பிரதமர் மோடியை எச்சரித்தார். ஆனால், அவர் அன்றும் இன்றும் பலவீனமான பிரதமராகவே இருக்கிறார். இந்த நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்கள் இழப்பைச் சந்திக்கப் போகிறார்கள். ட்ரம்ப் ஒவ்வொரு நாளும் நம்மை அவமதித்து வருகிறார். ஆனால். பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார்” என்று சாடியுள்ளார்.
இந்தியர்களுக்கு எத்தகைய பாதிப்பு? – அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித் திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். ஓராண்டில் 65,000 எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்கிறது. மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதன்படி ஒராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன.
இந்த விசாவை பெற்றவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்து பணியாற்றலாம். தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகள் வரை விசா காலத்தை நீட்டிக்க முடியும். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் எச்1பி விசாவில் சுமார் 7.5 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் மனைவி, பிள்ளைகள் என சுமார் 6 லட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக எச்1பி விசா அடிப்படையில் அமெரிக்கா முழுவதும் 13.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கி உள்ளனர்.
இந்த விசாவை பெற்றவர்களில் சுமார் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். தற்போது எச்1பி விசாவின் கட்டணம் ரூ.1.32 லட்சமாக உள்ளது. இந்த கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்த வகை செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். புதிய கட்டண நடைமுறை செப்டம்பர் 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி எச்1பி விசாவுக்கு ஓராண்டுக்கு ரூ.88 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். புதிய நடைமுறையால் லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.