புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பேசுவதில், பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக சசி தரூர் திகழ்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறது.
சசி தரூர் தலைமையிலான குழுவில், ஷாம்பவி, சர்பராஸ் அகமது, ஹரிஷ் பாலயோகி, ஷஷாங்க் மணி திரிபாதி, புபனேஸ்வர் காலிதா, மிலிந்த் தியோரா, தேஜஸ்வி யாதவ், தரஞ்சித் சிங் சாந்து உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின் தொடக்கத்தில் இருந்து மத்திய அரசுக்கு ஆதரவாக சசி தரூர் பேசி வருகிறார். வெளிநாடுகளுக்குச் செல்லும் தூதுக்குழுவில் இடம்பெறக்கூடிய 4 எம்பிக்களின் பெயரை மத்திய அரசு காங்கிரஸ் கட்சியிடம் கேட்டிருந்த நிலையில், காங்கிரஸ் அளித்த பெயர்களில் சசி தரூரின் பெயர் இடம்பெறவில்லை. எனினும், மத்திய அரசு அவரது பெயரை இணைத்ததோடு மட்டுமல்லாமல், அவரது தலைமையில் அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்குச் செல்லும் குழுவையும் அமைத்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை காங்கிரஸ் ஆதரித்தாலும், மத்திய அரசு அதனை அமல்படுத்திய விதத்தில் விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. எனினும், சசி தரூர் மத்திய அரசை முழுமையாக ஆதரித்துப் பேசி வருகிறார்.
அமெரிக்கா, கயானா, பனாமா நாடுகளில் இக்குழு தனது சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துள்ளது. இந்த பயணங்களில், சசி தரூர் மிகச் சிறப்பாக செயல்படுவதாகவும், அவரது உரை கவரக்கூடியதாக இருப்பதாகவும் பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் செயல்பாட்டைவிட சசி தரூரின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்பியுமான உதித் ராஜ், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பேசுவதில் பாஜகவினரை விஞ்சும் வகையில் அக்கட்சியின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக சசி தரூர் செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”என் அன்பான சசி தரூர், நீங்கள் இந்தியாவில் தரை இறங்கும் முன் பிரதமர் மோடி உங்களை பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கலாம், ஏன் வெளியுறவு அமைச்சராகவும்கூட அறிவிக்கலாம்.
பிரதமர் மோடிக்கு முன்பு இந்தியா ஒருபோதும் LOC மற்றும் சர்வதேச எல்லையைக் கடக்கவில்லை என்று கூறி காங்கிரஸின் பொற்கால வரலாற்றை நீங்கள் எப்படி இழிவுபடுத்த முடியும். 1965 ஆம் ஆண்டில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் பல இடங்களில் நுழைந்தது. இது லாகூர் பகுதியில் பாகிஸ்தானியர்களை முற்றிலும் ஆச்சரியப்படுத்தியது. 1971 ஆம் ஆண்டில், இந்தியா பாகிஸ்தானை இரண்டு துண்டுகளாக கிழித்தது.
UPA அரசாங்கத்தின் போது பல சர்ஜிக்கல் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன, ஆனால் அரசியல் ரீதியாக லாபம் ஈட்டுவதற்காக டிரம் அடிப்பது செய்யப்படவில்லை. உங்களுக்கு இவ்வளவு கொடுத்த கட்சிக்கு நீங்கள் எப்படி இவ்வளவு நேர்மையற்றவராக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ”காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக செயல்படுகிறார். பிரதமர் மோடிக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவாகப் பேசுவதில் அவர் பாஜக தலைவர்களையும் விஞ்சுகிறார். முந்தைய அரசாங்கங்கள் என்ன செய்தன என்பது அவருக்கு (சசி தரூர்) தெரியுமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தென் அமெரிக்க நாடான பனாமாவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய சசி தரூர், “இந்தியா அமைதியாக இருக்க விரும்புகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக எல்லையின் மறுபக்கத்தில் உள்ள எங்கள் நண்பர்கள்(பாகிஸ்தான்) அதை விரும்புவதில்லை. கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக நாங்கள் தொடர் தாக்குதல்களைச் சந்தித்துள்ளோம்.
பயங்கரவாதிகளை கையாள்வதில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்னவென்றால், பயங்கரவாதிகள் தாங்கள் கொடுக்க வேண்டிய விலையை உணர்ந்துள்ளனர்.” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.