மைசூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 45 வயதுக்குட்பட்ட 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தனர். இதனால் பீதியடைந்த மக்கள் மைசூருவில் உள்ள பிரபல ஜெயதேவா மருத்துவமனையில் இதயப் பரிசோதனை செய்துகொள்வதற்காக குவிகின்றனர். அதிகாலை தொடங்கி இரவு வரை காத்திருந்து இதய செயல்பாடு குறித்த பரிசோதனைகளை செய்து கொண்டு செல்கின்றனர். மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நிரம்பிவழியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மருத்துவமனை தரப்பும், ஹாசன் மாவட்டத்தில் 45 வயதுக்குட்பட்ட 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த செய்திகள் பரவிய பின்னரே இந்த அளவுக்குக் கூட்டம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மருத்துவ கண்காணிப்பாளரின் அறிவுரை: இது குறித்து மைசூரு ஜெயதேவா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்ட கேஎஸ் சதானந்த் கூறுகையில், “ஊடக செய்திகளைப் பார்த்துவிட்டு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜெயதேவா மருத்துவமனையில் இதயப் பரிசோதனை செய்து கொள்வது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்துவிடாது. மேலும், மக்கள் இந்த மருத்துவமனையை மட்டுமே நாடுவதை விடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கும் செல்லலாம்.
இதயப் பரிசோதனை செய்து கொள்வது மட்டும் எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படுவதைத் தடுத்துவிடாது. மக்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம். அதைவிடுத்து அனைவரும் இங்கே குவிந்தால், ஏற்கெனவே உள்நோயாளிகளாக இருக்கும் இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க இயலாமல் போய்விடும். வதந்திகளை நம்ப வேண்டாம்.” என்றார்.
பின்னணி என்ன? கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 45 வயதுக்குட்பட்ட 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தனர். இவர்களில் 6 பேர் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இதேபோல கதக் மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இந்நிலையில், மைசூரு ஜெயதேவா மருத்துவமனையிலும், அதன் பெங்களூரு கிளையிலும் இதயப் பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கை சமீப நாட்களில் 8% அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் ஹாசன் மற்றும் சுற்றுவட்டார மாவட்டஙக்ளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு: இதற்கிடையில் திடீர் மரணங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக கர்நாடக அரசு 10 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. மருத்துவ நிபுணர் குழு சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
அதனை பெற்றுக்கொண்ட பின்னர், தினேஷ் குண்டு ராவ் கூறியதாவது: கரோனா தொற்று பரவலுக்கு பிறகு மாரடைப்புகள் சற்று உயர்ந்துள்ளதை அறிக்கை உறுதி செய்துள்ளது. அதேவேளையில் கரோனா தடுப்பூசியால் இந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு ஆளான நபர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்த நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. திடீர் மாரடைப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இளம்வயது மாரடைப்பு மரணங்களை தடுக்க மருத்துவமனை தவிர பிற இடங்களில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தால் கட்டாயம் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது தான் உயிரிழப்புக்கு சரியான காரணம் என்ன என்பது தெரியவரும். இவ்வாறு தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.