கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மேற்கு வங்க சிறைகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்கள், குறிப்பாக, நன்னடத்தையுடன் செயல்படும் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த 2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
45 ஆயுள் தண்டனை கைதிகள் விரைவில் விடுதலைசெய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் வாழ்த்துகள். விடுதலையான வர்கள் நல்ல குடிமக்களாக வாழ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கையை மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன. புரூலியா மாவோயிஸ்ட் வழக்கில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நாராயண் மஹதோ உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.