கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்காக தலைநகர் கொல்கத்தாவில் தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் தலைமையில் நடந்த முகாமில் மாவட்ட ஆட்சியர்கள், மூத்த அரசியல் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது வரும் அக்டோபர் 6-ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மேற்குவங்க தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டோம். தற்போது மாநிலம் முழுவதும் 80,681 வாக்குச் சாவடிகள் உள்ளன.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதலாக 14,000 வாக்குச்சாவடிகளை அமைக்க உள்ளோம். பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டன. எனவே மேற்குவங்கத்தில் எவ்வித பிரச்சினையும் இன்றி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த பணியில் 32,000 அரசு அலுவலர்கள் மற்றும் ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்கள், ஆவணங்களை சேகரிப்பார்கள். வாக்காளர்களின் விவரங்களை எளிதாக பதிவேற்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.