புதுடெல்லி: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் மரபணு மாற்று தொழில்நுட்பம் ஆகிய விவகாரங்கள் முன்னிறுத்தப்பட்டன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று( ஆக. 26) நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை வகித்தார்.
ஆர்பாட்டத்திற்கு பின் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது காவல்துறையினர் தமிழக விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக, ஆர்பாட்டம் குறித்தான கோரிக்கை மனுவை பிரதமர் அலுவலகத்தில், கோவை மண்டல தலைவர் ஏ.எஸ்.பாபு நேரில் வழங்கினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டி தமிழகத்திற்கு வரும் உபரி நீரை தடுத்து நிறுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கெனவே, காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பில் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடகவிற்கு அனுமதி இல்லை என்பதை தெளிவாக கூறியுள்ளது. உச்ச நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிலையில், கர்நாடக முதல்வரான சித்தராமையா அரசு அரசியல் சுயலாபத்திற்காக மேகேதாட்டு அணை கட்டுவதற்கான நடவடிக்கை துவங்கி விட்டதாக அறிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை சட்ட விரோதம் என அறிவிக்க மத்திய அரசு முன் வர வேண்டும். ராசிமணலில் அணை கட்டிக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்கி சாகுபடி செய்து வந்த நிலையில், கடந்த நான்காண்டு காலமாக 136 அடிக்கு மேல் தேக்குவதற்கு கேரளா அரசு அனுமதி மறுக்கிறது. ரூல்கர்வ் முறை என்பது பேரிடர் காலத்தில் இரு மாநிலங்களும் இணைந்து முடிவு எடுத்து தண்ணீரை பராமரிப்பதற்கான வகையில் உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது. ஆனால் சராசரி மழை அளவு பெய்யும் காலத்திலேயே 142 அடி நிரப்புவதற்கு அனுமதிக்க மறுத்தது. இதனால், 136 அடியிலேயே அணையின் நீர்மட்டம் பராமரிக்கப்பட்டு வருவது, மதுரை மண்டல விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது. 152 அடி கொள்ளளவை உயர்த்துவதற்கு பேபி அணையை பலப்படுத்த வேண்டும்.
அதற்கான பராமரிப்பு மேற்கொள்வதற்கான கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு மதிக்கவில்லை. இதனை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏற்க இயலாது. கேரள அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
மண்ணையும் மக்களையும் அழிக்கும் உள்நோக்கம் கொண்ட மரபணு மாற்று தொழில் நுட்பத்துக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இச்சூழலில், மத்திய அரசு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக மரபணு திருத்தப்பட்ட விதைகள் என்கிற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மரபணு மாற்று விதைகளையே திணிப்பதற்கு முயற்சிக்கிறது.
உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் மனித உடலுக்கு ஏற்றதா? என்பதை ஆய்வு செய்யக்கூடிய நிறுவனம் ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை. அனுமதி பெறப்படாமல் அறிமுகப்படுத்தியுள்ளதை கைவிட வேண்டும். ஒட்டு மொத்தமாக மரபணு தொழில்நுட்பத்தை மத்திய அரசு கொள்கை பூர்வமாக கைவிட்டு இந்திய விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.
தமிழகத்தில் டிஏபி, யூரியா உள்ளிட்ட இடுபொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஒரு முட்டை யூரியா 270 விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இணை இடுபொருள் ரூபாய் 750 கொடுத்து வாங்கினால்தான் ஒரு மூட்டை யூரியா வாங்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு மூட்டை யூரியா ரூபாய் ஆயிரம் வரையிலும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒப்புக் கொள்ளும் நிறுவனங்களுக்கு மட்டுமே உற்பத்தி நிறுவனங்கள் உரத்தை விநியோகம் செய்கிறார்கள்.
மறுக்கும் பட்சத்தில் உர விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே மத்திய அரசின் வேளாண்துறை, உரத்துறை அமைச்சர்கள் ஒன்று கூடி இணை இடுபொருள் கட்டாய விற்பனையை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க செயலாளர் எல்.ஆதிமூலம், நெல்லை மண்டல செயலாளர் மாடசாமி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அருமைராஜ், மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், தஞ்சை மண்டல தலைவர் துரை.பாஸ்கரன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் பிரபாகரன், திருவாரூர் அறிவு, பஞ்சநாதன், இருபதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.