மேகாலயாவின் ஒரே ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவான ரோனி வி.லிங்டோ இன்று (ஜூலை 30) அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியில் (NPP) இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாகப் பணியாற்றிய லிங்டோ, மைலீயம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவர் இன்று துணை முதல்வர் ஸ்னியவ்பாலங்தார் உட்பட மூத்த என்பிபி தலைவர்கள் முன்னிலையில் இணைப்புக் கடிதத்தை சட்டமன்ற சபாநாயகர் தாமஸ் ஏ. சங்மாவிடம் சமர்ப்பித்தார்.
இதுகுறித்து பேசிய சபாநாயகர் சங்மா, “அவரது கடிதத்தை ஆய்வு செய்த பிறகு, அது சரியாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளேன். எனவே, இனிமேல், அவர் சபையில் என்பிபி-யின் எம்எல்ஏவாக அங்கீகரிக்கப்படுவார்.” என்று கூறினார்.
2023 மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வென்றது. காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவரான சலெங் ஏ சங்மா, 2024 மக்களவைத் தேர்தலில் துரா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன்பின்னர் காங்கிரஸ் எம்எல்ஏக்களான செலஸ்டின் லிங்டோ (உம்ஸ்னிங்), கேப்ரியல் வஹ்லாங் (நோங்ஸ்டோயின்), மற்றும் சார்லஸ் மார்ங்கர் (மஹாதி) ஆகியோர் ஆகஸ்ட் 19, 2024 அன்று முதல்வர் கான்ராட் கே. சங்மா தலைமையில் என்பிபி கட்சியில் இணைந்தனர்.
இப்போது லிங்டோவும் கட்சி மாறியதால், 60 உறுப்பினர்களைக் கொண்ட மேகாலயா சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை.
மேகாலயா சட்டப்பேரவையில் ஆளும் என்பிபி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. 2 உறுப்பினர்களை கொண்ட பாஜக, 12 உறுப்பினர்களை கொண்ட யுடிபி, 2 உறுப்பினர்களை கொண்ட ஹெச்எஸ்பிடிபி, 2 சுயேட்சைகள் ஆளும் என்பிபி அரசை ஆதரிக்கின்றனர். 5 எம்எல்ஏக்களை வைத்துள்ள திரிணமூல் காங்கிரஸ் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக உள்ளது. விபிபி கட்சிக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர்.