பெங்களூரு: வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக கூறி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று ராகுல் காந்தி பேரணி நடத்தினார்.
இந்நிலையில், உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளதற்கு பதில் அளித்து ராகுல் காந்தி கூறியதாவது: நாடாளுமன்றத்துக்குள் நான் உறுதிமொழி எடுத்திருக்கிறேன்.
ஆனால், வாக்குகள் திருட்டு தொடர்பாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. வாக்குகள் திருட்டு தொடர்பாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியவுடன் சில மாநிலங்களின் தேர்தல் ஆணைய இணையதளங்கள் முடங்கிவிட்டன.
நாடு முழுவதும் மின்னணு வாக்காளர் பட்டியலை முழுமையாக அணுகும் வகையில் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். அத்துடன் வீடியோ பதிவுகளையும் வழங்க வேண்டும்.
எங்களுக்கு மின்னணு வாக்காளர் பட்டியல் விவரம் கிடைத்தால்தான், இந்த நாட்டின் பிரதமர், வாக்குகளை திருடித்தான் பதவிக்கு வந்தார் என்பதை எங்களால் நிரூபிக்க முடியும்.
கடந்த 10 ஆண்டு மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். எங்களுக்கு சில காலம் தேவைப்படலாம். ஆனால், உங்களை பிடிக்காமல் விடமாட்டோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தேர்தல் ஆணையத்திடம் 5 கேள்விகளை கேட்டுள்ளார். அவை:
1. மின்னணு வாக்காளர் பட்டியலை ஏன் எதிர்க்கட்சிகளுக்கு தருவதில்லை: எவற்றை மறைக்கிறீர்கள்?
2. தேர்தல் முடிந்து 45 நாட்களில் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளை ஏன் அழிக்கிறீர்கள்?
3. கள்ள வாக்குகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றம் ஏன்?
4. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவது ஏன்?
5. பாஜக.வின் ஏஜென்டாக தலைமை தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா என்பதை எங்களுக்கு தெளிவாக சொல்லுங்கள். இவ்வாறு ராகுல் காந்தி கேள்விகள் கேட்டுள்ளார்.