புதுடெல்லி: 2006 ஆம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரையும் விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வரும் ஜூலை 24 ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க ஒப்புக்கொண்டது. மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விஷயத்தின் அவசரத்தைக் காரணம் காட்டி உடனடியாக விசாரிக்க கோரியதை அடுத்து நீதிபதிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
முன்னதாக, கடந்த 2006-ம் ஆண்டு 189 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 12 பேரை மும்பை உயர் நீதிமன்றம் நேற்று விடுவித்தது. சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.
கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகரில் ஓடும் 7 ரயில்களில், 11 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 189 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில், 12 பேர் குற்றவாளிகள் என விசாரணை நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றவாளிகள் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷ்யாம் சந்தக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், “மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. இவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டார்கள் என சந்தேகத்தின் பேரில் கூறுவதை ஏற்க முடியாது.
மேலும் விசாரணையின்போது மீட்கப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வரைபடங்கள் ஆகியவற்றுக்கு குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த தாக்குதலில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கூட அரசுத் தரப்பால் நிரூபிக்க முடிய வில்லை.
எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அவர்களுக்கான தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது. வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லாவிட்டால் அனைவரையும் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.” என்று கூறப்பட்டிருந்தது.