பாவ்நகர்: மும்பை – அகமதாபாத் இடையே விரைவில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை – குஜராத்தின் அகமதாபாத் நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தார். 2017 செப்டம்பரில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஜப்பானிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் புல்லட் ரயில் திட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி ஆகும். மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்துக்கு அதிநவீன தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 12 ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்துக்காக ஜப்பானில் 2 சின்கான்சென் ரக புல்லட் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் இதன் சோதனை ஓட்டம்நடந்து வருகிறது. இந்த புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. இந்த சூழலில், குஜராத்தின் பாவ்நகர் ரயில் முனையத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், புல்லட் ரயில் திட்டம் தொடர்பான தகவல்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். அவர் கூறியதாவது: நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை, மும்பை – அகமதாபாத் இடையே விரைவில் தொடங்கப்படும். இதற்கான கட்டுமான பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய புல்லட் ரயிலில் மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு 2 மணி நேரம் 7 நிமிடங்களில் செல்ல முடியும்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் 34,000 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத், அம்ருத் பாரத் எக்ஸ்பிரஸ், நமோ பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 8 அம்ருத் பாரத் ரயில் களின் சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயில்களில், வந்தே பாரத் ரயில்களுக்கு இணையான வசதிகள் உள்ளன. ஆனால், கட்டணம் மிக குறைவு.
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை செப்டம்பரில் தொடங்கப்படும். இந்த ரயில்களில் 16 பெட்டிகள் இருக்கும். ஒரு ரயிலில் 1,128 பேர் பயணம் செய்ய முடியும். படுக்கை வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ரயில்கள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படும் என்பதை ரயில்வே வாரியம் முடிவு செய்யும். இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜப்பானில் இருந்து சரக்கு கப்பல் மூலம் புல்லட் ரயில்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளன. விரைவில் இந்தியாவில் புல்லட் ரயில்களின் சோதனை நடைபெறும். புல்லட் ரயில்களின் இயக்கம், பராமரிப்பு தொடர்பாக இந்திய குழு ஜப்பானில் முகாமிட்டுள்ளது. 360 ரயில்வே ஊழியர்கள், ஜப்பானில் பயிற்சி பெற உள்ளனர். 80 சதவீத கட்டுமான பணிகள்முடிந்துள்ளன. எஞ்சிய 20 சதவீதபணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.