புதுடெல்லி: மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளதாகவும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட உள்ளதாகவும் வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்த நபர் நொய்டாவில் கைது செய்யப்பட்டார்.
மும்பை போக்குவரத்துப் போலீசாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு சமீபத்தில் ஒரு மிரட்டல் செய்தி வந்திருந்தது. ஃபிரோஸ் என்பவரின் பெயரில் வந்த அந்த மிரட்டல் செய்தியில், “மும்பை நகரத்தின் பல்வேறு இடங்களில் 34 மனித வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளன. லஷ்கர் இ ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இந்த வெடிவிபத்துக்கு 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட இருக்கிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வாட்ஸ்அப் செய்தியை அடுத்து நேற்று மும்பை முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று நீரில் கரைக்கப்பட உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நேரக்கூடாது எனும் நோக்கில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும், வாட்ஸ்அப் செய்தியை அனுப்பிய நபரை கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், வாட்ஸ்அப் செய்தி மூலம் போலியாக அச்சுறுத்த முயன்ற 51 வயது அஸ்வினி குமார் என்பவரை போலீசார் உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் இன்று கைது செய்தனர்.
பிஹாரின் பாடலிபுத்ராவைச் சேர்ந்த அஸ்வினி குமார், கடந்த 5 ஆண்டுகளாக நொய்டாவில் வசித்து வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அஸ்வினி குமாரின் நண்பரான ஃபிரோஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2023ம் ஆண்டு இவர் 3 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் ஃபிரோஸ் பெயரில் அஸ்வினி குமார் வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அஸ்வினி குமாரை மும்பைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து 7 மொபல் போன்கள், 3 சிம் கார்டுகள், 6 மெமரி கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசர் தெரிவித்துள்ளனர்.