மும்பை: மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், விக்ரோலியில் உள்ள பார்க்சைடில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த சூழலில், மும்பைக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மும்பை விக்ரோலியில் பார்க்சைட் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மற்றும் கற்கள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் ஜன்கல்யாண் சொசைட்டியில் உள்ள ஒரு வீட்டின் மீது சரிந்து விழுந்தன.
இதில் அந்த வீட்டில் வசிக்கும் மிஸ்ரா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்து, ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில், ஷாலு (19) மற்றும் சுரேஷ் (50) ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆர்த்தி (45) மற்றும் ருதுராஜ் (20) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 5 மணி வரையிலான ஐந்து மணி நேரத்தில் விக்ரோலியில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்த நேரத்தில் மட்டும் விக்ரோலியில் 200 மிமீக்கு மேல் மழை பொழிந்தது. இந்த காலகட்டத்தில் தாகூர் நகரில் 213 மிமீ மழையும், மரோலின் பகுதியில் 216 மிமீ மழையும் பொழிந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் சனிக்கிழமை வரையிலான 24 மணி நேரத்தில், விக்ரோலியில் அதிகபட்சமாக 257.5 மிமீ மழை பதிவாகியது.
கனமழை காரணமாக மும்பையில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும் நேற்று இரவு முதல் பெய்த கனமழைக்குப் பிறகு மும்பையில் பேருந்துகள் இயக்கத்திலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இமாச்சல் கனமழை: இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜூன் 20 முதல் பெய்துவரும் பருவமழையால் இதுவரை 257 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மழை தொடர்பான சம்பவங்களில் 133 பேரும், விபத்துகளில் சிக்கி 124 பேரும் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பருவமழை தொடர்பான பாதிப்புகளால் 331 பேர் காயமடைந்துள்ள நிலையில், 37 பேர் காணாமல் போயுள்ளனர்.