மும்பை: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ், புத்தம் புதிய ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஏர்போட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) ஆகிய அனைத்தும் கடந்த 9-ம் தேதி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டன.
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய ஐபோன்கள் உள்ளிட்ட சாதனங்கள் தற்போது ஆப்பிள் இந்தியா வலைதளம், ஆப்பிள் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் தளங்கள், நாட்டில் உள்ள பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கின்றன.
மேலும், அவை டெல்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ கடைகள் வழியாகவும் கிடைக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் ஐபோன் 17 மாடல்களின் விலை ரூ.89,000 முதல் தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று காலை விற்பனைக்கு வந்த ஐபோன் 17 சீரிஸை வாங்க ஆப்பிள் ஸ்டோர் நிறுவனங்கள் முன்பு நள்ளிரவு முதலே வாடிக்கையாளர்கள் குவிந்துவிட்டனர்.
மும்பையிலுள்ள பிகேசி ஆப்பிள் ஐபோன் ஸ்டோர் முன்பு அதிகாலை முதலே நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். கூட்டம் அலைமோதிய நிலையில், ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னேறிச் செல்ல முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.