புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவுதினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமரும் பாஜகவின் முதல் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சதைவ் அடல்-ல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி. நட்டா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட தலைவர்கள் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், சதைவ் அடலில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் முன்னிலையில் பக்தி இசைப் பாடல்கள் பாடப்பட்டன. முன்னதாக, சதைவ் அடலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்துவதற்காக நாங்கள் அனைவரும் இங்கே வந்திருக்கிறோம். நாங்கள் எப்போதுமே வாஜ்பாயை நினைவில் கொள்வோம்” என தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரத்தை உயிரற்ற பொருளாதாரம் என குறிப்பிட்ட ராகுல் காந்தியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த கிரண் ரிஜிஜூ, “இந்தியா எவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை இன்று முழு உலகமும் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளத்தக்க தருணம் இது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய மீதமுள்ள அனைத்து மசோதாக்களும் நிறைவேற்றப்படும்” என தெரிவித்தார்.
வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அடல் பிஹாரி வாஜ்பாயை அவரது நினைவு தினத்தில் நினைவு கூர்கிறேன். இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காணும் வகையில் வாஜ்பாய் ஆற்றிய அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும், வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முன்னாள் பிரதமர், பாஜகவின் நிறுவன உறுப்பினர், பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய், மதிப்பு அடிப்படையிலான அரசியலை ஊக்குவிப்பதன் மூலம் வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். வாஜ்பாய் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவர். ஆட்சியை இழக்க நேரிட்டாலும் கூட, கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாதவர் அவர்.
அவரது தலைமையின் கீழ், இந்தியா போக்ரானில் வெற்றிகரமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தியது, கார்கில் போரில் எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது. வாஜ்பாய் தனது எண்ணங்கள் மற்றும் செயல்கள் மூலம் தேச சேவையின் பாதையில் நம் அனைவரையும் தொடர்ந்து ஊக்குவிப்பார். அவரது நினைவு நாளில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.