புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக ரயிலில் இருந்து ‘அக்னி பிரைம்’ ஏவுகணையை, இலக்கை நோக்கிசெலுத்தி இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இதன்மூலம், ரயில் ஏவுதளம் வைத்துள்ள ஒருசில நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
பாதுகாப்பு படைகளுக்கு தேவையான பல வகை ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரிக்கிறது. தரையில் இருந்து மட்டுமின்றி, ராணுவ வாகனங்கள்,போர்க்கப்பல்களில் அமைக்கப்படும் ஏவுதளம் என பல வகையான ஏவுதளங்களில் இருந்து இந்த ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டு படைகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், முதல்முறையாக ரயில் மூலம் தேவையான இடங்களுக்கு ஏவுகணைகளை கொண்டு சென்று, ரயிலில் உள்ள லாஞ்சர்கள் மூலம் ஏவும் விதமாக, ரயில் ஏவுதளப் பெட்டி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இந்த பெட்டியை, ரயில் பாதை உள்ள எந்த இடத்துக்கும் கொண்டு சென்று, எதிரி நாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியும். இந்நிலையில், ரயில் ஏவுதளம் மூலமாக ‘அக்னி பிரைம்’ ரக ஏவுகணை நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏவுகணை சென்ற பாதை,தரைக் கட்டுப்பாட்டு மையங்கள்மூலம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. ஆனால், சோதனை நடத்தப்பட்ட இடத்தின் விவரம் வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் ரயில் ஏவுதளம் மூலம் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது இதுவே முதல்முறை. ஒரு சில நாடுகள் மட்டுமே ஏவுகணைகளை ஏவுவதற்கு ரயில் ஏவுதளத்தை பயன்படுத்துகின்றன. தற்போது அந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இதுவரை பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே இந்திய ரயில்வே நெட்வொர்க் பயன்பட்டது. இனிமேல் எதிரி நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கும் ரயில் பாதைகள் பயன்படும். எல்லை அருகே உள்ள ரயில் பாதைகளில் ரயில் ஏவுதளத்தை எளிதில் கொண்டு சென்று எதிரி நாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியும். மேம்படுத்தப்பட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள அக்னிபிரைம் ஏவுகணை 2,000 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இது விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும்.
ராஜ்நாத் சிங் பாராட்டு: அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளதாவது: இந்தியாவில் ரயில் லாஞ்சர் மூலம் முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ரயில் பாதை இணைப்பு உள்ள எந்த இடத்துக்கும் இந்த ரயில் லாஞ்சரை குறுகிய நேரத்தில் கொண்டு செல்லலாம். ரயில் லாஞ்சர் பெட்டிகள் கொண்டு செல்லப்படுவதை எளிதில் கண்டுபிடிக்கவும் முடியாது. இந்த பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக டிஆர்டிஓ மற்றும் பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துகள். இந்த சோதனை மூலம் ரயில் லாஞ்சர்கள் வைத்துள்ள ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா
வும் இணைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை எடுத்த நான்கரை மாதங்களில், ரயில் ஏவுதளம் மூலம் அக்னி பிரைம் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.