புதுடெல்லி: மொபைல் போனை பயன்படுத்தி கைரேகை, முக அங்கீகார அடையாளத்தின் மூலம் யுபிஐ வழியாக பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகமாகிறது.
பொருட்களை வாங்குவது மற்றும் சேவை களை பெறுவதற்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது இதுவரை பின் நம்பர்களை அடையாளமாகக் கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்திய அரசின் தனித்துவமான அடையாள அமைப்பான ஆதாரின் கீழ் சேமிக்கப்படும் பயோமெட்ரிக் தரவுகளை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகமாகிறது. இது யுபிஐ பரிவர்த்தனையில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
பின் நம்பருக்கு மாற்றாக, கைரேகை, முக அங்கீகாரம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது நிதி மோசடிகள் பெருமளவு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பின் நம்பரைப் பொருத்தவரையில் பகிரப்பட அல்லது திருடப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், கைரேகை அல்லது முக அடையாளம் போன்ற பயோமெட்ரிக் தரவுகளை நகலெடுப்பது சாத்தியமற்றது. எனவே, இவற்றின் அடிப்படையிலான பரிவர்த்தனைகளில் மோசடிகளை செய்வது மிகவும் கடினமானது என்று கூறப்படுகிறது.