மும்பை: முகநூலில் நட்பாக பழகிய பெண்ணிடம், மும்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் 2 ஆண்டுகளில் ரூ.8.7 கோடி பணத்தை இழந்துள்ளார். மும்பையில் வசிக்கும் 80 வயது முதியவருக்கு, கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகநூலில் சார்வி என்ற பெண் நட்பாக பழகுவதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை ஏற்றுக் கொண்டவுடன் இருவரும் போன் எண்களை பரிமாறி வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் தொடர்ந்து தகவல்களை பரிமாறியுள்ளனர். கணவரை விட்டுப் பிரிந்து பிள்ளைகளுடன் வசிப்பதாக சார்வி கூறியுள்ளார். அதன்பின் பிள்ளைகளுக்கு உடல்நிலை பாதிப்பு என கூறி முதியவரிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் அவ்வப்போது யுபிஐ மூலம் பணம் அனுப்பி உதவியுள்ளார்.
சில நாட்கள் கழித்து கவிதா என்ற பெயரில் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் முதியவரை தொடர்பு கொண்டு சார்வியின் தோழி என அறிமுகமாகியுள்ளார். சில நாட்களில் அவர் ஆபாச தகவல்களை அனுப்பி பணம் கேட்க தொடங்கியுள்ளார். சில மாதங்கள் கழித்து தினாஸ் என்ற பெண் சார்வியின் சகோதரி என கூறி அறிமுகமாகியுள்ளார்.
அவர் மருத்துவமனையில் சார்வி இறந்து விட்டதாக கூறி பணம் கேட்டுள்ளார். சார்வியும், முதியவரும் சாட்டிங்கில் பகிர்ந்து கொண்ட தகவல்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து முதியவருக்கு அனுப்பி தினாஸ் பணம் பறித்துள்ளார். முதியவர் பணத்தை திருப்பி கேட்டபோது, தினாஸ் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.
அதன்பின் ஜாஸ்மின் என்ற பெண் முதியவரிடம் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்யத் தொடங்கியுள்ளார். அவர் தினாஸ் தோழி என கூறி முதியவரிடம் பணம் பெற்றுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரை முதியவர் 734 பணப் பரிமாற்றங்கள் மூலம் ரூ.8.7 கோடி பணத்தை இழந்துள்ளார்.
அவரது சேமிப்பு முழுவதும் தீர்ந்ததால், மருமகளிடம் ரூ.2 லட்சம் பெற்று தன்னிடம் தொடர்பு கொண்டவர்களுக்கு கொடுத்துள்ளார். பிறகு தனது மகனிடம் ரூ.5 லட்சம் கடன் தரும்படி முதியவர் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மகன் எதற்காக பணம் வேண்டும் என கேட்டபோது நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.
சைபர் மோசடியில் சிக்கி ஏமாந்துவிட்டோம் என்பதை முதியவர் அறிந்தவுடன், அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான் அவருக்கு நினைவாற்றல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக சைபர் குற்றப் பிரிவில் கடந்த மாதம் 22-ம் தேதி புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸார், ஒரே பெண்ணே, நான்கு பேரின் பெயரில் முதியவரை ஏமாற்றி பணம் பறித்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.