அய்சால்: மிசோரமில் முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது தவிர ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக மிசோரம் மாநிலம் அய்சால் நகரில் உள்ள விமான நிலையத்துக்கு நேற்று காலை சென்றடைந்தார். அங்கிருந்து லம்முவல் கிரவுண்டு பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டார். ஆனால் கனமழை காரணமாக அங்கு செல்லவில்லை.
இதையடுத்து, பைராபி – சாய்ராங் இடையிலான 51.38 கி.மீ. நீள ரயில் பாதையை பிரதமர் மோடி கணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த பாதை அய்சால் நகரையும் அசாமின் சில்சர் நகரையும் இணைக்கிறது. அத்துடன் சாய்ராங் (மிசோரம்) -ஆனந்த் விஹார் (டெல்லி) இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ், கொல்கத்தா-சாய்ராங் இடையிலான கொல்கத்தா எக்ஸ்பிரஸ் மற்றும் குவாஹாட்டி-சாய்ராங் இடையிலான குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில் சேவைகளையும் அவர் காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன்மூலம் மிசோரம் மாநிலத்தில் முதல் முறையாக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சாலை கட்டுமானம் உட்பட ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் முடிவடைந்த சில திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மிசோரம் மாநிலம் இப்போது முக்கிய பங்கு வகிக்கிறது. இது நாட்டுக்கு குறிப்பாக மிசோரம் மக்களுக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள். இன்று முதல் அய்சால் நகரம் நாட்டின் ரயில்வே வரைபடத்தில் இடம்பெறுகிறது.
இந்த புதிய ரயில் வழித்தடத்தின் மூலம் மிசோரம் மாநில விவசாயிகளும் வர்த்தகர்களும் நாடு முழுவதும் தங்கள் பொருட்களை சுலபமாக சந்தைப்படுத்த முடியும். மேலும் மக்கள் கல்வி மற்றும் சுகாதார வசதிக்காக பிற ஊர்களுக்கு எளிதாக செல்வதற்கான வாய்ப்புகளை பெறுவார்கள். மேலும் சுற்றுலா, போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் துறைகளில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
172 ஆண்டுகளுக்கு பிறகு: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் முதல் முறையாக ரயில் சேவை தொடங்கப்பட்டது.ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் நில அமைப்பு காரணமாகரயில் சேவை இயக்கப்படவில்லை. இந்நிலையில், மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு வடகிழக்கு மாநிலங்களிலும் ரயில் பாதைகள் படிப்படியாக நிறுவப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் ரயில் சேவை தொடங்கி 172 ஆண்டுக்குப் பிறகு மிசோரம் மாநிலத்தில் முதல் முறையாக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.