பஸ்தர்: “மாவோயிஸ்டுகளுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஒன்று அவர்கள் சரணடைய வேண்டும், இல்லாவிட்டால் பாதுகாப்புப் படையினரை எதிர்கொள்ள வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்ட தலைநகரான ஜக்தால்பூரில் நடைபெற்ற பஸ்தர் தசரா உற்சவம் மற்றும் சுதேசி மேளா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, “மாவோயிஸ்ட் அச்சுறுத்தலுக்கு மார்ச் 31, 2026 அன்றுடன் விடை கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பஸ்தர் உள்பட மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சியை உறுதிப்படுத்த மத்திய அரசும் சத்தீஸ்கர் அரசும் உறுதிபூண்டுள்ளன. இதில், பேசுவதற்கு என்ன இருக்கிறது?
லாபகரமான சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையை நாங்கள் வகுத்துள்ளோம். வாருங்கள், உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள். ஆயுதங்களை கைகளில் எடுத்து பஸ்தரின் அமைதியை சீர்குலைக்க முயன்றால், எங்கள் ஆயுதப்படைகள், துணை ராணுவப்படைகள், காவல்படைகள் பதிலடி கொடுக்கும். இங்குள்ள தண்டேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்றபோது, அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் பஸ்தர் பகுதி முழுவதையும் சிகப்பு பயங்கரவாதத்தில் இருந்து விடுவிப்பதற்கான வலிமையை பாதுகாப்புப் படையினர் பெற பிரார்த்தித்தேன். பஸ்தரின் அமைதியை ஆயுதங்களால் சீர்குலைப்பவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
வளர்ச்சிக்காக போராடுவதற்காகவே நக்ஸல் இயக்கம் பிறந்தது என்று டெல்லியில் சிலர் பல ஆண்டுகளாக தவறான தகவல்களைப் பரப்பி வந்தனர். ஆனால், முழு பஸ்தரும் பின்தங்கி இருப்பதற்குக் காரணமே, நக்ஸலைட் இயக்கம்தான். இன்று நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம், குடிநீர், சாலைகள், கழிப்பறைகள், ரூ. 5 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு, 5 கிலோ இலவச அரிசி போன்ற அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளன. ஆனால், பஸ்தர் அத்தகைய வளர்ச்சியை இழந்துள்ளது.
நரேந்திர மோடி அரசு சத்தீஸ்கருக்கு கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ. 4 லட்சம் கோடிக்கு மேல் நிதி வழங்கி உள்ளது. மார்ச் 31, 2026க்குப் பிறகு, மாவோயிஸ்ட்களால் உங்கள் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. மாவோயிஸத்தால் தவறாக வழிநடத்தப்பட்டவர்கள், முக்கிய நீரோட்டத்தில் சேரும்படி அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். மாநிலத்தில் உள்ள பழங்குடியினரை கவுரவிக்கும் வகையில் பாஜக அரசு பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
நாட்டு மக்கள் அனைவரும் சுதேசி பொருட்களை வாங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். 140 மக்களும் சுதேசிக்கு மாறுவது என உறுதி எடுத்துக்கொண்டால், நமது நாடு உலகின் தலைசிறந்த பொருளாதாரமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. சமீபத்தில் ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைத்து மிகப் பெரிய நிவாரணத்தை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்துள்ளார். சுதேசி கலாச்சாரத்தை நாம் ஏற்றுக்கொண்டால், நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய உத்வேகத்தைப் பெறும்” என தெரிவித்துள்ளார்.