மும்பை: மகாராஷ்டிராவின் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், மாலேகான் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி குண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். 101 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு (ஏடிஎஸ்) பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். பைக்கில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுவெடித்து சிதறியது தெரியவந்தது. அந்த பைக்கின் பதிவெண் போலி என்றும் தெரிந்தது. அதன் இன்ஜின் எண், சேசிஸ் எண் ஆகியவை அழிக்கப்பட்டிருந்தன.
பின்னர், தடயவியல் சோதனை மூலம் இன்ஜின் எண், சேசிஸ் எண் கண்டுபிடிக்கப்பட்டது. அது, பெண் துறவி பிரக்யா சிங் தாக்குருக்கு சொந்தமான பைக் என்று தெரியவந்தது. 2008 அக்டோபர் 23-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு, வழக்கின் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டார்.
பிறகு, இந்த வழக்கில் ராணுவ மூத்த அதிகாரி லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோஹித் கைது செய்யப்பட்டார். முன்னாள் ராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாய், பொருளாளர் அஜய் ரஹிர்கர், ராணுவ உளவு பிரிவு அதிகாரி சுதாகர் சதுர்வேதி, சுதாகர் திவேதி, சமீர் குல்கர்னி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2011-ம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) வழக்கு மாற்றப்பட்டது. மும்பையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அடுத்தடுத்து 4 நீதிபதிகள் விசாரித்தனர்.
கடந்த 2016-ம் ஆண்டு என்ஐஏ சார்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பிறகு மேலும் 2 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. 5-வது நீதிபதியாக ஏ.கே.லகோட்டி வழக்கை விசாரித்தார்.
வழக்கு விசாரணை சுமார் 17 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. அதேநேரம், சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் குற்றவாளியாக அறிவிக்க முடியாது. சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு (யுஏபிஏ – ‘உபா’) சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது தவறானது.
‘மாலேகான் குண்டுவெடிப்புக்கு பைக் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது பிரக்யா தாக்குருக்கு சொந்தமானது’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், பைக் அவருக்கு சொந்தமானது என்பது நிரூபிக்கப்படவில்லை. அதேபோல, ‘அந்த பைக்கில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ராணுவ மூத்த அதிகாரி பிரசாத் புரோஹித் தனது வீட்டில் குண்டுகளை பதுக்கி வைத்திருந்தார், அவரே வெடிகுண்டுகளை தயாரித்தார். அபினவ் பாரத் அமைப்பின் பெயரில் நிதி திரட்டப்பட்டு, மாலேகான் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது’ என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவற்றை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.
எனவே, குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்குர், பிரசாத் புரோஹித், ரமேஷ் உபாத்யாய், அஜய் ரஹிர்கர், சுதாகர் சதுர்வேதி, சுதாகர் திவேதி, சமீர் குல்கர்னி ஆகிய 7 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். மாலேகான் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அகமது அன்சாரி தெரிவித்தார்.
இந்துத்வா வென்றதாக பிரக்யா நெகிழ்ச்சி: குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள பெண் துறவி பிரக்யா சிங் தாக்குர் கடந்த 2019 முதல் 2024 வரை போபால் மக்களவை தொகுதியின் பாஜக எம்.பி.யாக பதவி வகித்தார். தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, மும்பை என்ஐஏ நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டின்பேரில் என்னை கைது செய்தனர். விசாரணை என்ற பெயரில் மிக கொடூரமாக சித்ரவதை செய்தனர். கைது நடவடிக்கை எனது வாழ்க்கையை சீரழித்தது. துறவறம் பூண்டு தூய்மையாக வாழ்ந்த என் மீது சேற்றை வாரியிறைத்து களங்கப்படுத்தினர். குற்றம்சாட்டப்பட்டிருந்த 7 பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளோம். இந்துத்வா வெற்றி பெற்றுள்ளது. தவறு செய்தவர்களை பகவான் நிச்சயம் தண்டிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.