புதுடெல்லி: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகிய 4 பேரும் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அனைவரும் தமிழில் பதவியேற்றனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுகவை சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுக-வின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அவையில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
இதற்கிடையே, தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 இடங்களுக்கு ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகினர்.
இந்நிலையில், திமுக சார்பில் நிறுத்தப்பட்ட பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகிய 4 பேரும் மாநிலங்களவையில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.பி.யாக பதவியேற்றனர். தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அவர்கள், பின்னர் உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டனர். கமல் பதவியேற்றபோது காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.
கமல்ஹாசன் தனது வலைதள பதிவில், ‘நமது நாட்டை பிரிவினை ஆபத்துகளில் இருந்து மீட்க வேண்டும். அரசியலமைப்பின் மீதான மரியாதையுடன், ஜனநாயகம் மீதான நம்பிக்கையுடன் இந்த பணியை தொடங்குகிறேன். ஒரு சமூகத்துக்காக அல்ல, பொது நன்மைக்காக பேசுவேன். அரசியலமைப்பின்படி, மனசாட்சியுடன் சேவை செய்ய ஓர் உறுதியான சபதம் எடுத்துள்ளேன். டெல்லியில் தமிழகத்தின் உறுதியான குரல் ஒலிக்க பாடுபடுவேன். குறுகிய ஆதாயத்துக்காக அன்றி, தேசிய வளர்ச்சிக்காக பாடுபடுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
புதிய எம்.பி.க்களில் திமுக சார்பில் வில்சன் மட்டும் 2-வது முறையாக எம்.பி.யாகியுள்ளார். மற்ற 5 பேரும் முதல்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகி உள்ளனர். அதிமுக சார்பில் தேர்வான இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் 28-ம் தேதி பதவியேற்க உள்ளனர்.