புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது.
அவர்களுக்குப் பதில் புதிய உறுப்பினர்களாக 6 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகினர். அவர்களில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி(கவிஞர் சல்மா), எஸ்.ஆர். சிவலிங்கம், பி.வில்சன் ஆகிய 4 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் அவையை நடத்தி வரும் துணைத் தலைவர் ஹரிவன்ஷிடம் வாழ்த்து பெற்றனர்.
“மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பட்டதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறைமையுடன் உறுதிகூறுகிறேன்” என தமிழில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக்கொண்டனர். மற்றவர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்கியது. எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும். இதேபோல், மக்களவையும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.