புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல், பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முடங்கின.
இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: அமளியால் மாநிலங்களவையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மாநிலங்களவை சுமூகமாக செயல்படுவதற்காக 1997-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எம்.பி.க்கள் பின்பற்ற வேண்டும்.
தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரில் 180 முக்கிய கேள்விகள், 180 பூஜ்ய நேர பதில்கள், பல விஷயங்கள் பற்றி 180 சிறப்பு குறிப்புகள் ஆகியவற்றை பரிசீலிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக இதுவரை 53 மணி மற்றும் 21 நிமிட பணி நேரத்தை இழந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.