புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மக்களவையில் நடைபெறவுள்ள விவாதத்தில் மூத்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு சசி தரூர் பரபரப்பாக பதிலளித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பங்கேற்பது குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே சசி தரூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “மவுன விரதம், மவுன விரதம்” என இரு வார்த்தைகளை மட்டும் கூறினார். மேலும், அவர் இதுகுறித்த எந்த கேள்விக்கும் விரிவான பதிலை அளிக்கவில்லை.
சமீபத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளிக்க சென்ற எம்.பி.க்கள் குழுவுக்கு சசி தரூர் தலைமை தாங்கினார். மேலும், அவர் ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசை முழுமையாக ஆதரித்து பேசி வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சி அவர் மீது அதிருப்தியில் உள்ளது. எனவே, இந்த விவாதத்தின் போது, சசி தரூருக்கு பேச காங்கிரஸ் வாய்ப்பு வழங்குமா என்பது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கடும் அமளி ஏற்பட்டு இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன. இதனையடுத்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 28, 29-ம் தேதிகளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலையில் அவை தொடங்கியது முதலே எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக மக்களவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதுபோல மாநிலங்களவையும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.