புதுடெல்லி: மலேசியாவில் அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஆசியான் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
47-வது ஆசியான் உச்சி மாநாடு மலேசியாவில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல். அதே நேரத்தில் இந்த நிகழ்வில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்புக்கு மலேசியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல். அதை ட்ரம்ப் உறுதி செய்தால் இந்த நிகழ்வின் போது பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு அமலுக்கு வந்த பிறகு இரு நாட்டு தலைவர்களின் முதல் சந்திப்பாக ஆசியான் மாநாடு அமைய வாய்ப்புள்ளது.
இந்திய பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி: அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, உலக நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப பதில் வரி விதிக்கப்படும் என்று கூறிய அவர், அதற்கான பட்டியலை வெளியிட்டார்.
இதற்கு 90 நாள் காலக்கெடு அறிவித்தார். காலக்கெடு முடிந்ததும், உலக நாடுகள் மீதான வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக 5 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட வேளாண் விளைபொருட்கள், பால் பொருட்களுக்கான சந்தையை திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இதனால், உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 7-ம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 27-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய தொழில் துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.