மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்த சமூகத்தில் 96 குலி மராத்தா, குன்பி ஆகிய இரு பிரதான பிரிவுகள் உள்ளன. இதில் 96 குலி மராத்தா முன்னேறிய வகுப்பினராகவும், குன்பி சமுதாயத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் (ஓபிசி) அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் 96 குலி மராத்தா பிரிவினரையும் ஓபிசி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மராத்தா சமுதாய தலைவர் மனோஜ் ஜாரங்கே பாட்டீல் கோரிக்கை விடுத்துள்ளார். இதை முன்னிறுத்தி கடந்த 29-ம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் அவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரோடு சுமார் 40,000-க்கும் மேற்பட்ட மராத்தா சமுதாயத்தினர் மும்பையில் குவிந்தனர்.
இதனால் மும்பையின் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. சட்டம், ஒழுங்கு பிரச்சினையும் எழுந்தது. இதனிடையே மகாராஷ்டிர அமைச்சர்கள் ராமகிருஷ்ண விக்கே பாட்டீல், மாணிக்ராவ் கோகடே, சிவேந்திர ராஜே போஸ்லே ஆகியோர் மும்பை ஆசாத் மைதானத்துக்கு சென்று மராத்தா சமுதாய தலைவர் மனோஜ் ஜாரங்கேவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு உண்ணாவிரதத்தை ஜாரங்கே முடித்துக் கொண்டார். இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறும்போது, “எங்களது 8 கோரிக்கைகளில் 6 கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது” என்று தெரிவித்தனர்.