மும்பை: மராத்தா சமூகத்துக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரி, 4 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரும் மனோஜ் ஜாரங்கி இன்று முதல் தண்ணீர் அருந்துவதை நிறுத்துவதாக சபதம் செய்துள்ளார்.
ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் அறிவிக்கக் கோரியும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மனோஜ் ஜாரங்கி நடத்தி வருகிறார்.
இதுகுறித்து மகாராஷ்டிரா அரசு நேற்று (ஆகஸ்ட் 31) மராத்தா சமூகத்திற்கு குன்பி அந்தஸ்து அளித்து ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து சட்டப்பூர்வ கருத்தைப் பெறப்போவதாகக் அறிவித்தது.
இந்த நிலையில், நேற்று ஜாரங்கி பேசுகையில், “தேவேந்திர பட்னாவிஸ் அரசாங்கம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் கூட, தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் இருந்து நான் அசையப் போவதில்லை. எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மும்பையை விட்டு வெளியேறப் போவதில்லை. குன்பிகளாக 58 லட்சம் மராத்தாக்கள் இருப்பதாக அரசாங்கத்திடம் பதிவுகள் உள்ளன.
அரசாங்கம் கோரிக்கைகளை ஏற்காததால், நாளை முதல் நான் தண்ணீர் அருந்துவதை நிறுத்துவேன். இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை நான் பின்வாங்கப் போவதில்லை. எதுவாக இருந்தாலும், ஓபிசி பிரிவின் கீழ் மராத்தாக்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெறுவோம்.
மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் கூற வேண்டும். இடஒதுக்கீடு விரும்புவோர் அதை ஏற்றுக்கொள்வார்கள். சட்ட சிக்கல் இருந்தால் மராத்தாக்களை குன்பிகளாக பொதுமைப்படுத்த வேண்டாம். ஆனால், மராத்தாக்கள் ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.” என்று அவர் கூறினார்.
மராத்தா போராட்டக்காரர்கள் ஆசாத் மைதானம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளையும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களையும் ஆக்கிரமித்துள்ளதால், காலை நேரங்களில் தெற்கு மும்பை பகுதியில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவது குறித்து போலீஸார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மராத்தா போராட்டம் நடந்து வருவது குறித்து வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தெற்கு மும்பையில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், வணிகங்களைப் பாதுகாக்கவும் அரசாங்கம் அல்லது உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வர்த்தகர்கள் சங்கத் தலைவர் வீரேன் ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.