புதுடெல்லி: மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக ஆளுநர்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தின்போது தெரிவித்தார்.
குடியரசு தலைவர் மற்றம் ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்தது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத்தக்கு 14 கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளிப்பது தொடர்பான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று தொடங்கி, இன்றும் நடைபெற்றது.
மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஆளுநர் பதவி என்பது ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளுக்கான ஒரு புனித இடம் அல்ல. மாறாக அது மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான ஒரு பாலம். அந்த வகையில், ஆளுநர்கள், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக உள்ளனர்.
ஆளுநர் பதவி தொடர்பாக அரசியல் சாசன சபையில் விவாதம் நடத்தப்பட்டு வரைவு மசோதா 131 தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டுமா அல்லது தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், குடியரசு தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுவார் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிரிவு 200, ஆளுநர்களுக்கு விருப்புரிமையை வழங்குகிறது. அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரல்ல. எந்தக் கட்சி அல்லது அணி அரசாங்கத்தை அமைக்க பெரும்பான்மையைக் கொண்டுள்ளது என்பதை ஆளுநர் விருப்புரிமையாகப் பயன்படுத்தலாம்.
ஒரு மசோதா விஷயத்தில் ஆளுநருக்கு 4 விருப்பங்கள் உள்ளன. ஒன்று, ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், இரண்டு மசோதாவை நிறுத்திவைக்கலாம், மூன்று மசோதாவை திருப்பி அனுப்பலாம், நான்கு ஆலோசனைக்காக குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். குடியரசு தலைவரின் பரிந்துரைக்கு அனுப்புவது என்பது மசோதாவை நிறுத்திவைப்பதே.” என தெரிவித்தார். வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.