புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் உள்ள கோர்கி கிராமத்தில் பழமையான காஜி மியான் தர்கா உள்ளது. குர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள இந்த தர்காவுக்குள் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் இரவு நேரத்தில் புகுந்துள்ளது. உள்ளே இருந்த தர்காவின் மஸார் எனும் சமாதியை கும்பல் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
மறுநாள் காலை தர்கா சேதம் அடைந்துள்ளதை பார்த்து உள்ளூர் முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
உள்ளூர் மக்கள் பலர் குர் காவல் நிலையத்தில் கூடி உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரினர். உத்தர பிரதேசத்தை அடுத்து பாஜக ஆளும் ம.பி.யிலும் முஸ்லிம்களின் மதத் தலங்கள் குறிவைக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
ரீவா தர்கா சேதம் குறித்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து ரீவா உதவி ஆட்சியர் அனுராக் திவாரி கூறும்போது, ‘‘தர்கா சேதத்துக்கு பின் நிலைமையை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் அமைதி திரும்பியுள்ளது. தர்காவில் சேதம் அடைந்த பகுதிகள் அப்பகுதியினர் ஆதரவுடன் சரிசெய்யப்படுகின்றன.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது’’ என்றார். இதனிடையே, ரீவா தர்காவை சேதப்படுத்திய காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதையடுத்து, தர்காவை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.